Published : 26 Jul 2024 09:47 PM
Last Updated : 26 Jul 2024 09:47 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணை நிரம்பும் நிலையை எட்டியதால், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையில் திறந்துவிடப்படும் தண்ணீர் மற்றும் பரவலாக பெய்த மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 250 கனஅடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 51 அடியாக உள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதும் வெளியேற்றப்படும் என நீர்வளத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீர் முழுவதும், அணையில் இருந்து பாசன கால்வாய்கள், தென்பெண்ணையாற்றில் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி அணையின் மொத்த கொள்ளளவான 51 அடி (1666.29 மில்லியன் கன அடி) ஆகும். தற்போது அணையில் நீர்மட்டம் 51 அடி ( 1551.76 மில்லியன் கனஅடி) உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதும் வெளியேற்றப்பட வேண்டியுள்ளதால் சாத்தனூர் அணை வரை உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் மற்றும் தாழ்வானப்பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.
குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரியமுத்தூர், திம்மாபுரம், சுண்டேகுப்பம், காவேரிப்பட்டிணம், கால்வேஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சௌட்டஹள்ளி, தளிஹள்ளி உள்ளிட்ட 8 கிராமங்களுக்கும், தருமபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களுக்கு தென்பெண்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment