Published : 26 Jul 2024 06:41 PM
Last Updated : 26 Jul 2024 06:41 PM
சென்னை: “நான்கு ஆண்டு கால ஆட்சியில் ஒரு முறையாவது அம்மா உணவகத்தில் பழனிசாமி ஆய்வு செய்தாரா?” என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் ஆய்வு செய்ததுடன், சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் மேம்பாட்டுக்காக ரூ.21 கோடியை அறிவித்தார். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சுட்டிக்காட்டிய பின்தான் அம்மா உணவகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்ததாக, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்திருந்தார். இது குறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “கரோனா காலகட்டத்தில் 2019-ம் ஆண்டு அம்மா உணவகத்தில், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வர், முழுமையாக உணவு அளிக்க அனுமதி கோரினார்.
ஆனால், எந்தவிதமான அனுமதியும் நாங்கள் தரமாட்டோம் என்று மறுத்து விட்டனர். அதன்பின், 160 நாட்கள் சென்னை பெருநகரத்திலே பணியாற்றுகின்ற தூய்மைப் பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் தனது சொந்தச் செலவில் உணவு வழங்கினார். கரோனா காலத்தில் அப்போதைய முதல்வர் வெளியில் வரவில்லை. ஆனால், தற்போதைய முதல்வர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல், மக்களுக்கு தேவையான பால் வசதி, குடிநீர் வசதி, உணவுக்கு தேவையான உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
கொளத்தூரில் பிரத்யேக வண்டியில் ஒரு லட்சம் பேருக்கு 6 மாதம் தொடர்ந்து உணவு வழங்கப்பட்டது. உதயகுமாருக்கும் சென்னைக்கும் சம்பந்தமில்லை என்பதால் அவருக்கு தெரியாது. சென்னை மேயர் பொறுப்பேற்ற பின், அம்மா உணவகத்தில் ஆய்வு செய்தோம். சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி இருந்தபோது, நேரடியாக அம்மா உணவகத்துக்கு எம்பி-யும், நானும் சென்று ஆய்வு செய்தோம். இதை மக்கள் அறிவார்கள்.
கடந்த 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பழனிசாமி, அவர் ஆட்சியில் என்றாவது ஒருநாள் அம்மா உணவகத்துக்குச் சென்று ஆய்வு செய்துள்ளாரா என்பதை அறிக்கை வெளியிட்டவரே அவரிடம் கேட்க வேண்டும். எங்கள் முதல்வர் மக்களுக்கு பயன்படுகின்ற திட்டங்கள் யார் கொண்டு வந்தாலும் அதை செயல்படுத்துபவர். 2021-ல் ஆட்சிக்கு வந்தபோது, முன்னாள் முதல்வர் படம் பொறித்த புத்தகப் பைகளை அரசு பணம் வீணாகக் கூடாது என்பதற்காக, அந்த புத்தகப் பைகளையே மாணவர்களுக்கு வழங்கும்படி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment