Published : 26 Jul 2024 05:56 PM
Last Updated : 26 Jul 2024 05:56 PM
மதுரை: குறவன் - குறத்தி எனும் பெயரை கேலிப் பொருளாக பயன்படுத்த தடை கோரிய வழக்கில் ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தமிழ் பழங்குடியின பாதுகாப்பு பிரிவு மாநில துணைச் செயலாளர் ராவணன் என்ற ராம்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், 'தமிழகத்தின் பொது இடங்களில், திரைப்படங்களில் குறவன் - குறத்தி என்ற பெயர் கேலிப் பொருளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது அந்த சமூகத்தை சேர்ந்த மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. தமிழர் கலாச்சாரத்தில் மலைப்பகுதியில் வாழ்ந்த மக்களையே குறவன் - குறத்தி எனும் பெயரிட்டு அழைத்தனர். அவர்களின் மாண்பு காக்கப்பட வேண்டும்.
சமீபத்தில் 'சண்டாளர்' எனும் சமூகத்தின் பெயரை பொது இடங்களில் தவறான பொருளில் பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது. எனில், 'குறவன் - குறத்தி' எனும் பெயரை கேலிப்பொருளாக பொது இடங்கள், பொது மேடைகள், அரசியல் மேடைகள், திரைப்படங்கள், பாடல்கள், கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும்.
இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. இருப்பினும் இதுவரை எந்தப் பதிலும் இல்லை. எனவே, பொது இடங்கள், பொது மேடைகள், அரசியல் மேடைகள், திரைப்படங்கள், பாடல்கள், கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் குறவன் - குறத்தி எனும் பெயரை கேலிப் பொருளாக பயன்படுத்த தடை விதித்து அரசு அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும்' எனக் கோரி இருந்தார்.
இந்த மனுவை பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி ஆர்.விஜயகுமார் அமர்வு இன்று விசாரித்து, மனு தொடர்பாக ஆதிதிராவிடர் நலத்துறையின் ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT