Last Updated : 26 Jul, 2024 05:51 PM

1  

Published : 26 Jul 2024 05:51 PM
Last Updated : 26 Jul 2024 05:51 PM

கிரிவலப்பாதை விவகாரத்தில் ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக பழனி நகராட்சியில் தீர்மானம்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: பழனி கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பழனி நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து திண்டுக்கல் ஆட்சியர் விசாரிக்க உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பழனி கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பழனி கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும், கிரிவலப் பாதையை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்தும் விதமாக ஆக்கிரமப்புகளை அகற்றி அடிப்படை வசதிகள் மற்றும் பேருந்து வசதிகள் செய்யவும் உத்தரவிட்டனர். இதையடுத்து 152 ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அகற்றப்பட்டது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி ஆர்.விஜயகுமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ராதாகிருஷ்ணன், “நீதிமன்ற உத்தரவுப்படி கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பக்தர்கள் எளிமையாக சென்று சாமி தரிசனம் செய்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பழனி நகராட்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பழனி கோயில் தேவஸ்தான அலுவலகம் முன்பு நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், "பழனி நகராட்சியில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதா? நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டதா என்பது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x