Published : 26 Jul 2024 04:01 PM
Last Updated : 26 Jul 2024 04:01 PM
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்? என எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக கே.பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் ராஜலட்சுமி, இளம்பாரதி ஆகியோர் ஆஜராகி, “சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் பழனிசாமி தன்னை இணை ஒருங்கிணைப்பாளர் என மனுதாக்கல் செய்துவிட்டு, தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எனக்கூறி பதில்மனு தாக்கல் செய்துள்ளார்” எனக் குற்றம் சாட்டினர்.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, “அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எப்படி மனுதாக்கல் செய்ய முடியும்? என பழனிசாமி தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. மேலும், “இந்த மனுவை எப்படி பதிவுத் துறை ஏற்றுக்கொண்டது?” என கேள்வி எழுப்பிய நீதிபதி, திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT