Published : 26 Jul 2024 02:59 PM
Last Updated : 26 Jul 2024 02:59 PM

“தமிழகத்துக்கு நிதி ஒதுக்குவதில் தொடர்ந்து பாரபட்சம்” - மத்திய அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

சென்னை: “தமிழகத்துக்கு நிதி ஒதுக்குவதில் தொடர்ந்து பாரபட்சம் காட்டும் பாசிச பாஜகவின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். வாக்களிக்காத மாநிலங்களுக்கு எதிரான மனநிலையை மத்திய பாஜக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.” என்று தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில், “கேலோ இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது முதல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள புள்ளிவிவரம், ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் தான் மத்திய பாஜக அரசு என்பதற்கான சான்றாக உள்ளது.

கடந்த 7 ஆண்டுகளில், பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்துக்கும், குஜராத்துக்கும் தலா ரூ.400 கோடிக்கு மேல் தந்து தாராளம் காட்டியிருக்கிற மத்திய அரசு, தமிழகத்துக்கு வெறும் ரூ.20 கோடியை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.

உலக செஸ் போட்டி, ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப், தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப், உலக சர்ஃபிங் லீக், ஸ்குவாஷ் உலகக் கோப்பை, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2023 என பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய அளவிலானப் போட்டிகளை தமிழகத்தில் நடத்தியிருக்கிறோம். சர்வதேச அரங்கில் இந்திய விளையாட்டுத்துறையின் முகமாக தமிழகம் மாறி வருகிறது.

விளையாட்டுத் துறையில் இத்தனை ஆக்கபூர்வமாக செயல்படும் தமிழகத்துக்கு வெறும் ரூ.20 கோடியை மட்டும் ஒதுக்கியிருப்பதை நம் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.

இது தமிழக விளையாட்டு வீரர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி. தமிழகத்துக்கு நிதி ஒதுக்குவதில் தொடர்ந்து பாரபட்சம் காட்டும் பாசிச பாஜகவின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். வாக்களிக்காத மாநிலங்களுக்கு எதிரான மனநிலையை மத்திய பாஜக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x