Published : 26 Jul 2024 12:34 PM
Last Updated : 26 Jul 2024 12:34 PM
உதகை: நீலகிரியில் கனமழை தொடர்ந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவலாஞ்சியில் அதிகபட்சமாக 197 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மழை காரணமாக, உதகை மற்றும் குந்தா தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக அதி கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஒரு சில இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
கனமழையின் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவலாஞ்சி, முதுமலை சுற்றுலா மையம், தொட்டபெட்டா காட்சி முனை, பைன் ஃபாரஸ்ட் ஆகிய சுற்றுலா தலங்கள் கடந்த 10 நாட்களாக மூடப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் வருகையின்றி சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அடிக்கடி சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உதகை மற்றும் குந்தா தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குன்னூர் மற்றும் உதகை பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் கேத்தி காவல் நிலையத்தின் மேல் ராட்சத மரம் ஒன்று விழுந்து பாதிப்பு ஏற்பட்டது.
இதில், அருகில் இருந்த குடியிருப்பும் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக காவலர்கள் உயிர்தப்பினர். ராட்சத மரம் என்பதால் கேத்தி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குன்னூர் அருகே அருவங்காடு எம்.ஜி காலனி பகுதியில் நிறுத்தி வைத்திருந்த வாகனத்தின் மீது மரம் விழுந்து வாகனம் பலத்த சேதமடைந்தது.
அதிர்ஷ்டவசமாக வாகனத்தில் யாரும் இல்லாதததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து மரங்களுக்கு அடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். நீலகிரியில் இன்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டர் அளவில் வருமாறு:-
அவலாஞ்சி – 197
அப்பர் பவானி – 102
சேரங்கோடு – 98
பந்தலூர் – 70
குந்தா – 67
கூடலூர் – 61
எமரால்டு – 58
தேவாலா – 57
நடுவட்டம் – 48
கிளன்மார்கன் – 44
ஓ வேலி – 42
செருமுள்ளி – 38
பாடந்தொரை – 36
உதகை – 19.7
கோடநாடு – 6
கோத்தகிரி – 2
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT