Published : 26 Jul 2024 11:19 AM
Last Updated : 26 Jul 2024 11:19 AM
சென்னை: நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட கட்டபொம்மன் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ‘பூலித்தேவன் மாளிகை’ என்றும், அந்த வளாகத்துக்கு ‘சுந்தரலிங்கனார் வளாகம்’ என்ற பெயரையும் மீண்டு சூட்ட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு மன்ற கூட்ட அரங்கில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலை அமைந்திருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு புனரமைப்பு பணி என காரணங்காட்டி வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை மாவட்ட நிர்வாகம் அங்கிருந்து அகற்றியுள்ளது. ஆனால் இதுவரை மீண்டும் அங்கு கட்டபொம்மன் சிலை நிறுவப்படவும் இல்லை, எந்த ஒரு முறையான அறிவிப்பும் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்படவும் இல்லை.
அதேபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பூலித்தேவன் மாளிகை என்றும், அந்த வளாகத்திற்கு சுந்தரலிங்கனார் வளாகம் என்றும் பெயர் சூட்டப்பட்டிருந்தது. தற்போது புனரமைக்கப்பட்ட அலுவலகத்திற்கு அவர்களின் பெயர்களையும் சூட்டாமல் பொதுவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்று மட்டுமே பெயரிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து இதுபோல் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை மறைப்பதிலேயே திராவிட முன்னேற்றக் கழகம் முழு முதல் வேலையாக செய்து கொண்டிருக்கிறது.
கப்பலோட்டிய தமிழன் வஉசி-யை சிறைப்படுத்திய வெள்ளைக்கார ஆஷ்க்கு நினைவுதினம் கொண்டாடும் தேசதுரோகிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் திமுக அரசு தற்போது விடுதலை போராட்ட வீரர்களை இருட்டடிப்பு செய்ய முயற்சிப்பது வேதனைக்குரியது. இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
உடனடியாக சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை அலுவலகத்திற்கு சூட்டுவதோடு வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும் இந்து முன்னணி வலியுறுத்துகிறது. தவறும் பட்சத்தில் பொதுமக்களை திரட்டி இந்து முன்னணி மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT