Published : 26 Jul 2024 05:25 AM
Last Updated : 26 Jul 2024 05:25 AM
சென்னை: சென்னை, திருச்சி, காஞ்சிபுரத்தில் மறு கட்டுமான திட்டத்தின் கீழ், இந்தாண்டு ரூ.1,147 கோடியில் 6,746 குடியிருப்புகள் தமிழ்நாடு நகர்ப்புறவாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் தா.மோ.அன்பரசன், 813 குடியிருப்புதாரர்களுக்கு ரூ.2.48 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர், ``கடந்த 2015-ம்ஆண்டு சென்னை நதிகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ், கூவம் நதிக்கரைகளில் இருந்த பல்லவன் நகர், எஸ்.எம்.நகர், கக்கன் நகர் போன்ற பகுதிகளில் குடியிருந்த குடும்பங்களுக்கு பெரும்பாக்கம் திட்டப் பகுதிக்கு மறுகுடியமர்வு செய்ய தற்காலிகமாக குடியிருப்பு ஆணை வழங்கப்பட்டது.
இவர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, முதல் கட்டமாக 440 குடும்பங்களுக்கு நிரந்தர ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு குடும்பத்துக்கு ரூ.35 ஆயிரம் வீதம் மறுகுடியமர்வு நிவாரணத் தொகையாக ரூ.1 கோடியே 54 லட்சம் இன்று வழங்கப்பட்டு உள்ளது'' என்று கூறினார்.
இதையடுத்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள சிந்தாதிரிப்பேட்டை, கொய்யாத்தோப்பு, சேத்துப்பட்டு மீனாம்பாள் சிவராஜ் நகர் பகுதி-1, 2 மற்றும் வேம்புலியம்மன் கோயில் திட்டப் பகுதிகளில்ரூ.205.15 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 1,202 அடுக்குமாடிக் குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் அன்பரசன் ஆய்வு செய்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால்,28 திட்டப் பகுதிகளில் சிதிலமடைந்த 7,582 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, ரூ.1608.89 கோடி மதிப்பில் 9,522 குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இந்த நிதியாண்டில் மறுகட்டுமானத் திட்டத்தில் சென்னைமாவட்டத்தில் 4,644 குடியிருப்புகளும், திருச்சியில் 702, காஞ்சிபுரத்தில் 1,400 என ரூ.1,146.82 கோடியில் 6,746 குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது'' என்றார்.
நிகழ்வுகளில், துறையின் செயலர் காகர்லா உஷா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமேலாண் இயக்குநர் சு.பிரபாகர், இணை மேலாண் இயக்குநர் க.விஜயகார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT