Published : 22 May 2018 09:23 AM
Last Updated : 22 May 2018 09:23 AM
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம், தண்ணீர் சேகரிப்பின் அவசியம் கருதி, மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அரசு ஊக்குவித்து வருகிறது. அரசுத் துறை கட்டிடங்கள், குடியிருப்புகள் என அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் செயல்படுத்தப் படுகின்றன.
இந்நிலையில், குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, நிலத்தடி நீர் செறிவூட்டல் திட்டத்தை அரசு ஊக்குவித்து வருகிறது. வீடுகளில் சமையல் அறை, குளியல் அறை, துணி துவைப்பதன் மூலம் வெளியேறும் தண்ணீரை வீணாக்காமல் நிலத்தடியில் செறிவூட்ட, இலவசமாக நிலத்தடி நீர் செறிவூட்டும் குழிகள் அரசின் சார்பில் அமைத்துக் கொடுக்கப்பட உள்ளன. கிராமப்புறங்களில் இடவசதியுள்ள வீடுகளில், கழிவுநீரைச் சேகரிக்கும் குழிகள் அமைத்து நிலத்தடி நீரைச் செறிவூட்டும் திட்டத்துக்கு ஊக்குவிப்பு வழங்கப்படுகிறது.
கிராம ஊராட்சிகளில் பெரும்பாலான கிராமங்களில் சாக்கடை வசதி குறைந்த அளவே உள்ளன. இதனால், கழிவுநீர் செல்ல முடியாமல் ஒரே இடத்தில் தேங்குகிறது. பல கிராமங்களில், அதற்கும் வழியின்றி சாலையிலேயே கழிவுநீர் தேங்குகிறது. துப்புரவு பணியாளர் பற்றாக்குறையால், சாக்கடைகளைப் பராமரிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இப்பிரச்சினைகளுக்குத் தீர்வாக நிலத்தடி நீரை செறிவூட்டும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: சமையல் அறை, குளியலறையில் கழிவுநீரை, உறிஞ்சுகுழி அமைத்து மண்ணில் சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், வீடுகள் மற்றும் பொது இடங்களில் நிலத்தடி நீர் செறிவூட்டும் குழிகள் இலவசமாக அமைக்கப்படும்.
வீடுகளுக்கு, ரூ.7,000 மதிப்பிலும், பொது இடங்களில் ரூ.8,100 மதிப்பிலும் உறிஞ்சு குழிகள் அமைக்கப்படும். இத்திட்டத்தால், கணிசமான அளவு நிலத்தடி நீர் செறிவூட்டப்படும். தற்போது காஞ்சி மாவட்டத்தில் 633 ஊராட்சிகளில் கழிவுநீரை உறிஞ்சும் குழிகள் அமைக்கப்பட உள்ளது. பட்டா நிலத்தில் வீடு கட்டியுள்ளோர் இத்திட்டத்தில் பயன்பெற லாம். இத்திட்டப்படி ஒரு மீட்டர் ஆழம், அகலத்தில் குழி தோண்டி, மணல், ஜல்லி கொட்டி நிரப்பப்படும். வீடுகளின் கழிவுநீர் குழிக்குள் சென்று, அங்கு சுத்திகரிக்கப்பட்டு பூமியில் செல்லும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் வீடுகளைச் சுற்றியும், பொது இடங்களிலும் கழிவுநீர் தேங்குவது தடுக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT