Published : 04 Aug 2014 12:00 AM
Last Updated : 04 Aug 2014 12:00 AM

கு.க. சிகிச்சையில் பெண் மரணம்: தி இந்து செய்தி எதிரொலியால் மருத்துவர்களிடம் இன்று விசாரணை

கோவை சுக்ரவார்பேட்டை தியாகி குமரன் வீதியைச் சேர்ந்தவர் வினோத்குமார். கூலித் தொழிலாளி. இவரது மனைவி கலைவாணி (32). இவர்களுக்கு ரம்யா (6), கனிஷ்கா (1) என்ற இரு மகள்கள் உள்ளனர்.

மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் கோவை டவுன்ஹால் வைசியாள் வீதி, மாநகர நகர் நல மருத்துவமனையில் ஜூலை 25-ம் தேதி நடைபெற்ற குடும்பக் கட்டுப்பாடு சிறப்பு முகாமில் கலைவாணிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது உடல்நலம் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்குச் சென்றார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஒரு வாரம் கோமாவில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு இறந்தார்.

இதுகுறித்து ‘தி இந்து’ அறிமுகப்படுத்தியுள்ள >‘உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணுக்கு தகவல் வந்தது. இதுகுறித்த விரிவான செய்தி ஞாயிற்றுக்கிழமை வெளியானது.

வலிப்பு நோய் பாதிப்பு இருந்ததை கலைவாணியும், அவரது உறவினர்களும் அறுவை சிகிச்சைக்கு முன்னதாக தெரிவிக்கத் தவறியதால் தவறு ஏற்பட்டதாக மாவட்ட சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை

இந்நிலையில், கலைவாணி சாவு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோவை மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் பாத்திமா தாவூத்துக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து இணை இயக்குநர் பாத்திமா தாவூத் கூறியதாவது: குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின்போது பெண் இறந்தது எதிர்பாராதது. இதுபோன்ற நிகழ்வு அரிதாக ஏற்படும். பெண்ணுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சுகாதாரத் துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள், உறவினர்களிடம் திங்கள்கிழமை விசாரணை நடத்த உள்ளோம். முழுமையாக மருத்துவ ஆய்வு நடத்திய பின்னர் தான் என்ன நடந்தது என்பதை தெளிவுபடுத்த முடியும். இறந்த பெண்ணின் உறவினர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு பாத்திமா கூறினார்.

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக நடத்தப்படும் முகாம்களில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லை எனப் புகார் கூறப்படுகிறதே என அவரிடம் கேட்டபோது, வசதிகள் இல்லாத மருத்துவமனைகளில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடத்த வேண்டாம் என பலமுறை தெரிவித்துவிட்டேன். இதுபோன்ற முகாம்களை அனைத்து வசதிகள் உள்ள மருத்துவமனையில் நடத்துமாறு ஏற்கெனவே பரிந்துரை செய்துள்ளேன். ஆனால் நடைமுறைக்கு வரவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x