Last Updated : 25 Jul, 2024 02:25 PM

 

Published : 25 Jul 2024 02:25 PM
Last Updated : 25 Jul 2024 02:25 PM

தஞ்சையில் நல்லா இருந்த யுனியன் கிளப்பும்... நாசம் செய்த சமூக விரோதிகளும்!

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரே பாதுகாப்பற்ற நிலையில் உள்ள யூனியன் கிளப் கட்டிடம். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ் |

தஞ்சாவூர்: தஞ்சாவூரின் அடையாளங்களில் ஒன்றாக, கடந்த 150 ஆண்டுகளாக உள்ள யூனியன் கிளப்கட்டிடம் தற்போது சமூக விரோதிகளால் சீரழிந்து வருகிறது. இந்தக் கட்டிடத்தை பழமை மாறாமல் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தஞ்சாவூரில் 1872-ம் ஆண்டு வாசக சாலை மற்றும் நூலகம், நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தொடங்கப்பட்டது. பின்னர் பழைய பேருந்து நிலையம் அருகே கோட்டை மதில் சுவர் இடிக்கப்பட்டு, அதிலிருந்த செம்புரான் கற்களை கொண்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு 1874-ம் ஆண்டு அப்போதைய மாவட்ட நீதிபதி பர்னர் ஆர்தர் கோக் என்பவரால் இந்த வாசகசாலை திறந்து வைக்கப்பட்டது. இதையடுத்து 1892-ம் ஆண்டு இந்தக் கட்டிடத்துக்கு ‘தஞ்சாவூர் யூனியன் கிளப்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த கிளப்பில் ஹாவ்லேக் என்ற பெயரில் ஆங்கில நூலகமும், பாவேந்தர் பெயரில் 5 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய தமிழ் நூலகமும், டென்னிஸ் கிளப்பும் இயங்கின. 1919-ம் ஆண்டு பிப்.12-ம் தேதி தஞ்சாவூருக்கு வருகை தந்த ரவீந்திரநாத் தாகூர், இந்த யூனியன் கிளப்புக்கு வருகை தந்து உரையாற்றியுள்ளார். அதேபோல, பேரறிஞர் அண்ணா, பாரதிதாசன் உள்ளிட்ட பல தலைவர்களும் இந்த கிளப்புக்கு வந்து சென்றுள்ளனர்.

தஞ்சாவூர் யூனியன் கிளப் கட்டிட வராண்டாவில்
காணப்படும் கால்நடைகளின் எச்சங்கள்.

இந்த யூனியன் கிளப் கட்டிடத்தில் முன்பு புத்தக கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பின், குத்தகை காலம் முடிவடைந்ததாக கூறி கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் யூனியன் கிளப்பை தனியார் நிர்வாகத்திடமிருந்து கைப்பற்றியது. பின்னர் அந்த இடத்தில் தஞ்சாவூர் மாநகராட்சியின் நகர்ப்புற துணை சுகாதார நிலையம் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த கட்டிடத்துக்கு வெள்ளையடிக்கப்பட்டது. மேலும் கட்டிடத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது.

இதனால், இந்த வளாகம் பகல் நேரங்களில் கால்நடைகளின் புகலிடமாகவும், இரவு நேரங்களில் ‘குடி’மகன்கள் மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது. இந்த கட்டிடத்தில் எங்கு பார்த்தாலும் காலி மதுபாட்டில்கள், காலிகுடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் கிடக்கின்றன. மேலும், கட்டிடத்தின் பல இடங்களில் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

யூனியன் கிளப் கட்டிடத்தின் மாடிப்படிகளில் கிடக்கும்
காலி மதுபாட்டில்கள், குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்டவை.

தஞ்சாவூரின் மையப்பகுதியில், எப்போதும் பரபரப்பாக காணப்படும் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள இந்த கட்டிடத்தை பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும். இந்த கட்டிடத்தை சீரமைத்து சொற்பொழிவுகள், நூல் வெளியீட்டு விழாக்கள் நடத்த குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு விட வேண்டும் என தஞ்சாவூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், இலக்கியவாதிகள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தஞ்சாவூர் யூனியன் கிளப் அருகே நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை விரிவாக்கம் செய்ததால், அதன் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது. மீண்டும் சுற்றுச்சுவர் எழுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கட்டிடத்தை பாதுகாத்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x