Published : 25 Jul 2024 05:09 PM
Last Updated : 25 Jul 2024 05:09 PM
விழுப்புரம்: “வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டால், மத்திய அரசை முதல்வர் கை காட்டுகிறார். அதற்கு எதுக்கு முதல்வர்? ஏதோ நடக்கப் போகிறது; நடத்திக் காட்டப் போகிறோம். அண்டம் கிடுகிடுங்க நடக்கப் போகிறது” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திண்டிவனம் அருகே கோனேரிகுப்பத்தில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸின் 86-வது பிறந்தநாளையொட்டி நிறுவனர் நாள் விழா, மரக்கன்று நடும் விழா, பாவரங்கம் என முப்பெரும்விழா பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெற்றது. இதையொட்டி, வன்னியர் சங்கத்தலைவர் மறைந்த காடுவெட்டி குரு சிலை அருகே 86 மரக்கன்றுகளை மருத்துவர் ராமதாஸ் நட்டுவைத்தார்.
அதனைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் அவர் பேசியது: “என்னை விட்டு இணைபிரியாத, நான் அடிக்கடி இங்கு வரவில்லை என்று வருத்தப்படும், வந்துபோன பின் மகிழ்கின்ற மரம், செடி கொடிகள், பூக்களுக்கு வாழ்த்துகள். கடந்த ஆண்டு எனது பிறந்த நாளில் 15 வருடத்துக்குப் பின் பணம் காய்க்கின்ற, 16 வகையில், 7,770 மரக்கன்றுகள் நடப்பட்டது. மாணவர்களாகிய நீங்கள் உங்கள் பெற்றோருக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கே செல்வங்கள். நிச்சயமாக நீங்கள் உயர்ந்த இடத்துக்குச் செல்வீர்கள்.
கேரளாவில் ஈழவர்கள் என்ற சாதியினர் மேலாடை போடக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தபோது, ஆதி நாராயணகுரு என்பவர் அவர்களுக்கு கல்வியைக் கொடுத்தார். வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கட் ராமனை சந்தித்து மனு கொடுத்தோம். அப்போது அவர், உத்தரப் பிரதேசத்தில் தனது சாதிக்காரர்கள் குதிரை வண்டி ஓட்டுகிறார்கள் என்று தன் மக்களைப் பற்றி குறிப்பிட்டார்.
மத்திய அரசின் உயர் பதவியில் ஈழவர்கள் உள்ளனர். அந்த சாதியிலிருந்து 4 முதல்வர் உருவாகியுள்ளனர். ஆனால், இங்கு குறைவில்லாமல் குடிக்க வைக்கிறார்கள். அவர்களை மீட்க முடியாமல் தவிக்கும் நான் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து 10.5 சதவீத இடஒதுக்கீடு குறித்து 35 நிமிடம் வகுப்பெடுத்தேன். அப்போது, இந்த ஊமை ஜனங்களுக்கு உங்களை விட்டால் யார் செய்யப் போகிறார்கள்? என்றேன்.
ஆனால், இந்த ஊமை ஜனங்கள் இன்னும் இரண்டு மாதத்தில் பேசப் போகிறார்கள். இந்த ஊமை ஜனங்கள் நாடே கிடுகிடுக்க, ஸ்தம்பிக்க, ஊமை ஜனங்களாக இருந்தவர்களுக்கு இவ்வளவு தைரியம், துணிச்சல் எப்படி வந்தது என்று மற்றவர்கள் பேசும் அளவுக்கு ஆட்சியில் இருப்பவர்களுடைய படை சாய, கோலோச்சுவது போதுமடா சாமி என்று ஓட பேசப் போகிறார்கள். இந்த நாடு அதனை பார்க்கத்தான் போகிறது.
ஏன் உங்களது அப்பா வீட்டுச் சொத்திலா நான் 10.5 சதவீதம் கேட்கிறேன்? இது எங்கள் நாடு, இது எங்கள் பூமி, இது எங்களால் வளர்ந்தது, இது எங்கள் மண், உனக்கு இங்கே என்ன வேலை? உன்னிடம் போய் நான் 10.5 சதவீதம் கேட்க வேண்டுமா? எனக்கு அவமானமாக இருக்கிறது. உன்னை கோட்டையில் சந்திக்க வேண்டுமா? எனக்கு அவமானமாக இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை உன்னிடம் கேட்டால்... நீ மத்திய அரசை கை காட்டுகிறாய். அதற்கு எதுக்கு முதல்வர்? ஏதோ நடக்கப் போகிறது; நடத்திக் காட்டப் போகிறோம். அண்டம் கிடுகிடுங்க நடக்கப் போகிறது” என்றார் ராமதாஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...