Last Updated : 25 Jul, 2024 01:45 PM

 

Published : 25 Jul 2024 01:45 PM
Last Updated : 25 Jul 2024 01:45 PM

ஆட்டம் காணும் அஸ்திவாரம்? - அச்சத்தில் ஆனைமலை பழங்குடியின மக்கள்

கூமாட்டி பழங்குடியின கிராமத்தில் புதிதாக கட்டப்படும் வீடுகளுக்கு, சிமென்ட் கலவைக்கு பதிலாக செம்மண்ணில் அமைக்கப்பட்டு வரும் அஸ்திவாரம்.

பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் கோழிகமுத்தி, கூமாட்டி, எருமைப்பாறை, நாகர் ஊற்று உள்ளிட்ட பழங்குடியின குடியிருப்புகள் உள்ளன. இதில், கோழிகமுத்தியில் 94 குடும்பங்கள், எருமைப்பாறையில் 30 குடும்பங்கள், கூமாட்டியில் 40 பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தில், ஆனைமலை புலிகள் காப்பக மலைப்பகுதியில் கோழிகமுத்தி, கூமாட்டி, எருமைப்பாறை, நாகர் ஊற்று 1, நாகர் ஊற்று 2 ஆகிய ஐந்து கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு 100 வீடுகள் கட்டித்தர திட்டமிடப்பட்டது.

அதற்காக கோழிகமுத்தி கிராமத்தில் 31, கூமாட்டியில் 22, எருமைப் பாறையில் 9, நாகர் ஊற்று 1-ல் 27, நாகர் ஊற்று 2-ல் 11 பயனாளிகள் என மொத்தம் 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மலைப்பகுதியில் 300 சதுர அடியில் ஒரு வீடு கட்டுவதற்கு ரூ. 4 லட்சத்து 95 ஆயிரத்து 430 நிர்ணயம் செய்யப்பட்டது. இத்தொகை அடித்தளம், வாயில் விட்டம் (லிண்டல்), மேற்கூரை மட்டம், முழுமையான பணி நிறைவு என நான்கு கட்டங்களாக வழங்கப்படுகிறது. இந்த 100 பயனாளிகளும், வனத்துறையின் வழிகாட்டுதல்படி வீடுகள் கட்டிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. இந்தப் பணியை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் செயல்படுத்த அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் கூமாட்டி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்றுவரும் வீடுகள் கட்டுமானப் பணி தரமானதாக இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து கூமாட்டி கிராம மக்கள் கூறியதாவது: மூங்கில் குச்சிகளையும், மண்ணையும் கொண்டு வீடுகட்டி மழைக்கும், காற்றுக்கும் பயந்து வசித்து வந்தோம். நீண்டகால கோரிக்கைக்கு பின்னர், தற்போது கூமாட்டி கிராமத்தில், 22 பேருக்கு அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அஸ்திவாரம் அமைக்கும் பணியில் கருங்கல் மற்றும் சிமென்ட் கலவை பயன்படுத்துவதற்கு பதிலாக, செம்மண்ணை கரைத்து ஊற்றி அடித்தளம் அமைக்கின்றனர். கூமாட்டி மலைக்கிராமம் என்பதால் அடித்தளம் வலுவாக இருந்தால்தான் கட்டுமானம் பாதுகாப்பாக இருக்கும். கருங்கல்லை அடுக்கி, அதன் மீது சேற்றை குழைத்து ஊற்றுகின்றனர்.

இதன்மீது வீடு கட்டும் போது, அதன் உறுதித்தன்மை மிகவும் மோசமாக இருக்கும் என கருதுகிறோம். இதுதொடர்பாக பொள்ளாச்சி சார்ஆட்சியர் கேத்தரின் சரண்யாவிடம் புகார் தெரிவித்தோம். அப்போது அவர், ‘பணியில் திருப்தி இல்லாவிட்டால், ஒப்பந்ததாரரிடம் பணிகளை நிறுத்தச் சொல்லி விடுங்கள். பழங்குடியின வட்டாட்சியரை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்ய அனுப்புகிறேன்’ என தெரிவித்தார். இதையடுத்து பணிகளை நிறுத்திவிட்டோம். இதுதொடர்பாக அரசும், மாவட்ட ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x