Published : 25 Jul 2024 04:26 PM
Last Updated : 25 Jul 2024 04:26 PM

“உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகுங்கள்!” - அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

சென்னை: அதிமுகவினர் அனைவரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. 9 தொகுதியில் 3-ம் இடத்துக்கும் ஒரு தொகுதியில் 4-ம் இடத்துக்கும் சென்றது. 7 தொகுதிகளில் ஜாமீன் தொகையை இழந்தது. இந்நிலையில் மக்களவைத் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளிடம் மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

முதல் கட்டமாக 23 மக்களவைத் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மீதமுள்ள தொகுதி நிர்வாகிகளுடன் 2-ம் கட்டமாக ஆலோசித்து வருகிறார். இன்று தென்காசி மற்றும் ஈரோடு மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இதில், தென்காசி மக்களவைத் தொகுதி அதிமுக நிர்வாகிகள் பேசும்போது, "இந்தத் தேர்தலில் நாம் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தவில்லை. கூட்டணியும் பலமாக இல்லை. அதனால் அதிக வாக்குகளை பெற முடியவில்லை. எங்களால் முடிந்தவரை கூட்டணி கட்சி வேட்பாளருக்காக பாடுபட்டு உழைத்தோம்" என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் பேசிய பழனிசாமி, "அதிமுகவினர் அனைவரும் விரைவில் நடைபெற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக வேண்டும். அதற்காக கட்சியில் அதிக அளவில் இளைஞர்களைச் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கி கட்சியை பலப்படுத்த வேண்டும். வரும் சட்டப்பேரவை தேர்தலில் பலமான கூட்டணி அமையும்" என்று அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x