Last Updated : 25 Jul, 2024 04:36 PM

1  

Published : 25 Jul 2024 04:36 PM
Last Updated : 25 Jul 2024 04:36 PM

கால்வாயில் குப்பை கொட்டுவதை தவிர்ப்பீர்: சென்னை மாநகராட்சி வலியுறுத்தல்

தணிகாசலம் கால்வாயில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்

சென்னை கொளத்தூர் 29-வது வார்டு பாலாஜி நகர் பிரதான சாலை மற்றும் தணிகாசலம் நகர் பிரதான சாலை சந்திப்பில் பிரசித்தி பெற்ற நாகாத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. 45 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் இக்கோயில் இப்பகுதி மக்களிடையே பிரபலமானது. இந்த கோயிலுக்கு தினமும் காலை, மாலைவேளைகளில் சுவாமி தரிசனத்துக்காக அருகில் உள்ள பாலாஜி நகர், தணிகாசலம் நகர், அன்னை சத்தியா நகர், விநாயகர் கோயில் தெரு, அம்பேத்கர் நகர், தேவகி நகர், மெஜஸ்டிக் காலனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கோயிலையொட்டி இருக்கும் தணிகாசலம் கால்வாயில் கடந்த ஒரு மாதமாக குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கோயிலில் தொடங்கி பொன்னியம்மன் மேடு தணிகாசலம் நகர் பிரதான சாலை 500 மீட்டர் வரை கால்வாயில் இவ்வாறு குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், துணிமணிகள், அட்டைப் பெட்டிகள், குளிர்பானபாட்டில்கள் போன்றவை ஏராளமாக குவிந்துள்ளதால் கால்வாயில் கழிவுநீர் அடைப்பு ஏற்படும் அபாயமும், நோய் தொற்று பரவும் நிலையும் உருவாகியுள்ளது.

இவ்வாறு தேங்கும் பிளாஸ்டிக் மற்றும்குப்பை கழிவுகளை மாநகராட்சி ஊழியர்கள் அவ்வப்போது அகற்றினாலும் கூட, முழுவதுமாக கழிவுகள் அப்புறப்படுத்தப்படுவதில்லை. அதேபோல அகற்றும் கழிவுகள் பெரும்பாலும் கோயில் சுற்றுவட்டாரத்தில் மாநகராட்சி ஊழியர்களால் குவித்து வைக்கப்படுகின்றன. இதனால் அவ்வழியே சென்று ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி சன்னதியை தரிசிக்கும் பக்தர்களும், அதையொட்டிய சாலை வழியே சென்றுவரும் பொதுமக்களும் மூக்கை பொத்தியவாறு கடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் கோயில் முன்பு நீர்வளத்துறை சார்பில் கால்வாய் சீரமைப்பு பணியும் கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வருவதால் கால்வாயில் இதுபோல குப்பைகள் தேங்குவதாகவும் கூறப்படுகிறது.

சுகாதார சீர்கேடுக்கு வழிவகுக்கும் வகையில் கோயில் அருகே இருக்கும் கால்வாயில் தேங்கும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை உடனடியாக அகற்றவும், கால்வாய் பணிகளை விரைந்து முடிக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் கூறும்போது, “இந்த பகுதியில் கால்வாய் பணி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து ரெட்டேரி மீன் மார்க்கெட் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் இருந்து வரும் கழிவுகள் மற்றும் குப்பைகள் பெருமளவு இங்கு சேர்ந்து நிற்கின்றன.

இதனை அகற்றும் ஊழியர்கள் உடனடியாக கழிவுகளை அகற்றுவதில்லை. அப்படியே சாலையில் விட்டுவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. எனவே சேரும் கழிவுகளை உடனுக்குடன் அகற்றுவதுடன், கால்வாய் சீரமைப்பு பணிகளையும் துரிதப்படுத்தி விரைவாக முடித்தால் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “கால்வாயில் சேரும் குப்பைக் கழிவுகளை தினசரி அடிப்படையில் ஊழியர்களை நியமித்து அகற்றி வருகிறோம். இருந்தாலும் அதிகளவில் குப்பைகள் தொடர்ந்து சேர்ந்து கொண்டே இருக்கின்றன. துரிதமாக கால்வாய் பணிகளை முடித்து, குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம் பொதுமக்களும் கால்வாயில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்” என்றனர்.

இதுதொடர்பாக 29-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கூறியதாவது: தணிகாசலம் கால்வாயை சீரமைக்கும் பணி கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கடந்த சில தினங்களாக ரெட்டேரி மற்றும் அதையொட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் இங்கு சேர்ந்து நிற்கின்றன. இவற்றை அகற்ற நாள்தோறும் மாநகராட்சி ஊழியர்கள் காலையும், மாலையும் வந்து செல்கின்றனர். குப்பைகளையும் அகற்றுகின்றனர். ஆனால் மீண்டும் குப்பைகள் தொடர்ந்து சேர்ந்த வண்ணம் இருக்கின்றன. அவர்களும் மனிதர்கள் தானே. எத்தனை முறை குப்பைகளை அகற்றுவார்கள்.

மக்கள் குப்பைகளை தரம் பிரித்து வாங்க வரும் துப்புரவு தொழிலாளர்களிடமோ அல்லது அந்தந்த பகுதிகளில் உள்ள குப்பை தொட்டிகளிலோ சென்று போடலாமே. அதைவிடுத்து அலட்சியமாக கால்வாய்களில் போட்டுவிட்டு சென்றால், அது ஓரிடத்தில் இதுபோல குவியலாக சேர்ந்து மற்ற பகுதியை சேர்ந்த மக்களுக்கும் தொந்தரவாக அமைகிறது என்பதை கூட உணருவதில்லை.

இங்கு சேரும் கழிவுகளை தற்போது நவீன இயந்திரத்தை கொண்டு அப்புறப்படுத்த திட்டமிட்டு வருகிறோம். ஆனால் இப்பகுதி குறுகிய வழித்தடத்தை கொண்டுள்ளது என்பதால், இயந்திரத்தை கொண்டு வந்து ஒரு மணி நேரம் பணியில் ஈடுபடுத்தினால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே தற்போது கால்வாயை ஒட்டிய காலியிடத்தை கண்டறிந்துள்ளோம்.

இன்னும் ஒரு வாரத்தில் கால்வாயில் சல்லடை போன்ற அமைப்பை ஏற்படுத்தி கழிவுகளை பிரித்து, நவீன இயந்திரம் மூலம் கழிவுகளை ஒரே இடத்தில் இருந்து அப்புறப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதேபோல கால்வாய் சீரமைக்கும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. அடிக்கடி மழை பெய்து வருவதால் இடையூறு ஏற்படுகிறது. எனினும் இன்னும் 2 மாதங்களில் கால்வாய் பணிகள் அனைத்தும் முடிவுற்றுவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x