Published : 25 Jul 2024 01:36 PM
Last Updated : 25 Jul 2024 01:36 PM

தமிழகத்தில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருத்துவ முகாமை தொடங்கி வைக்கும் அமைச்சர்

சென்னை: தமிழகத்தில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்புகள் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை, கோடம்பாக்கம் மண்டலம், தியாகராய நகர், சிஐடி நகர், ஸ்ரீராம் பேட் பகுதியில் நடைபெற்ற மழைக்கால நோய்களுக்கான முன்னெச்சரிக்கை சிறப்பு மருத்துவ முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு நோய்த்தடுப்புக்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் ஒவ்வொரு பருவமழைக்கு முன்னரும், பருவமழையினால் ஏற்படும் நோய் பாதிப்புகளை கண்டறிந்து, அவற்றுக்கு சிகிச்சை அளிக்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு பருவமழை என்று ஒவ்வொரு பருவமழையின் போதும் ஏற்படும் பாதிப்புகள் தொடர்ச்சியாக கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நடவடிக்கைகளின் காரணமாக, கடந்த 3 ஆண்டுகளாக மழைக்கால நோய் பாதிப்புகள் அனைத்தும் கட்டுக்குள் உள்ளன. கடந்த ஆண்டை பொறுத்தவரை அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை 10,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் என்ற வகையில் 26,000 க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, மிகப்பெரிய அளவில் நோய் பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டது.

கடந்த 2017ம் ஆண்டை பொறுத்தவரை தமிழகத்தில் அதிகமான டெங்கு பாதிப்பாக 23,294 பேருக்கு ஒரே ஆண்டில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, 65 பேர் மரணமடைந்திருந்தனர். அதே போல் 2012-ம் ஆண்டு 66 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலை இருந்தது. தொடர்ந்து 70 பேர் வரை உயிரிழந்த அந்த நிலையினை மாற்றி, உள்ளாட்சி நிர்வாகங்கள் குறிப்பாக ஊரக உள்ளாட்சி, நகர்புற உள்ளாட்சி போன்ற அமைப்புகளோடு ஒருங்கிணைந்து, மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கின்ற காரணத்தினால், டெங்கு பாதிப்புகளினால் ஏற்படும் உயிரிழப்புகள் கட்டுபடுத்தப்பட்டுள்ளது.

டெங்கு, எலிக்காய்ச்சல், உன்னிக் காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல், இன்புளுயன்சா காய்ச்சல் போன்ற பாதிப்புகள் தொடர்ந்து கண்டறியும் பணியினை மக்கள் நல்வாழ்வுத்துறையும், தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளும் தொடர்ந்து செய்து வருகிறது. சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, மதுரை, திருநெல்வேலி, நாமக்கல், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில், டெங்கு பாதிப்பு பொதுவாகவே அதிகரிக்க தொடங்கியுள்ளது, அதனை கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

உன்னி காய்ச்சல் கடலூர், தஞ்சாவூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் கண்டறியப்பட்டு வருகிறது. எலிக் காய்சலை பொறுத்தவரை சென்னை, கன்னியாகுமரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளது.

மஞ்சள் காமாலையை பொறுத்தவரை சென்னை, திருச்சி, தேனி போன்ற பகுதிகளில் கண்டறியப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்புளுயன்சா காய்ச்சல் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாதிப்புகள் கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நேற்று வரை 6,565 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பன்றிக் காய்சலினால் 390 பேரும், புளு காய்ச்சலினால் 56 பேரும், எலிக் காய்ச்சலினால் 1,481 பேரும், உன்னி காய்ச்சலினால் 2,639 பேரும், வெறி நாய்கடியினால் பாதிக்கப்பட்டவர்கள் 22 பேரும், மஞ்சள் காமாலையினால் 1750 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பன்றிக் காய்ச்சல், புளு காய்ச்சல், எலிக் காய்ச்சல், உன்னி காய்ச்சல், மஞ்சள் காமாலையினால் உயிரிழப்புகள் இல்லை.

டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையினை அணுகாததன் காரணமாகவும், அவர்களின் உடல்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்ததன் காரணமாகவும், 3 பேர் உயிரிழந்துள்ளனர். வரும் மாதங்களை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழையினை எதிர்நோக்கியுள்ள மாதங்களாகும். எனவே நோய் பாதிப்புகளை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக, சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, மக்களுக்கு தேவையான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியினை பொறுத்தவரை இந்த பணிகளை சுகாதார அமைப்பு மிகச் சிறப்பாக செய்து வருகிறது. அந்த வகையில் இன்று தியாகராய நகர் தொகுதிக்குட்பட்ட சி.ஐ.டி நகரில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டு வீடுகள் தோறும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளது. பொதுவாகவே பருவநிலை மாற்றங்களின் போது ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்காக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 476 நடமாடும் மருத்துவ குழுக்கள் தமிழகம் முழுவதும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். அதேபோல் 805 RBSK என்று சொல்லப்படும் நடமாடும் பள்ளி மருத்துவ குழுக்கள் இயங்கி வருகின்றது. ஏதாவது ஒரு தெருவிலோ, ஏதாவது ஒரு சிற்றூரிலோ அல்லது ஏதாவது ஒரு மலைக் கிராமத்திலோ மூன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டால், அங்கே உடனடியாக மருத்துவ முகாம்கள் நடத்தும் வகையில் இந்த குழுக்கள் இயங்கி வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை 2972 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தினசரி காய்ச்சல் கண்டவர்களுடைய அறிக்கை பெறப்பட்டு வருகிறது. அப்படி பெறப்பட்ட அறிக்கைகளை எந்த வகையான காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கொசுப் புழு உற்பத்தியாவதை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 22,384 தினசரி தற்காலிக பணியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு அன்றாடம் புகை மருந்து அடிப்பது, கொசு மருந்து தெளிப்பது, அபேட் தெளிப்பது போன்ற பல்வேறு கொசுப் புழுக்களை தடுக்கும் பணியினை செய்து வருகிறார்கள்.

தமிழகத்தில் 16,005 புகை மருந்து அடிக்கும் இயந்திரங்கள் கையிருப்பில் உள்ளது. அதற்கு தேவையான மருந்துகள் குறிப்பாக பைரித்திரம் 51,748 லிட்டர், மாலத்தியான் 17,816 லிட்டர் மற்றும் டெமிபாஸ் 33,446 லிட்டர் கையிருப்பில் உள்ளது. கொசுத்தடுப்பு பணிகளுக்கு தேவையான மருந்துகள் அனைத்தும் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிப்புகள் யாருக்கேனும் ஏற்பட்டால் தன்னிச்சையாக மருத்துவர்களின் பரிந்துரைகள் இல்லாமல் மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம். யாருக்கேனும் அவசர உதவி தேவைப்பட்டால் 104, 108 போன்ற அவசர எண் உதவிகளை நாடவேண்டும்.

இதற்கிடையே, கடந்த வாரம் கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்புகளினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. கேரளா மற்றும் தமிழக எல்லைகளை பாதுகாக்கும் பணியில் பொது சுகாதாரத் துறை தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. கேரளா மாநிலத்தில் இருந்து வரும் போக்குவரத்து வாகனங்கள், பேருந்துகள், கார்கள் போன்ற அனைத்து வாகனங்களையும், பயணிகளை பரிசோதிக்கும் பணி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக நடுங்கனி (Nadugani), சோழடி (Choladi), தளுர் (Thaloor), நம்பியார்குன்னு (Nambiyarkunnu), பட்டாவயல் (Paatavayal) போன்ற 5 இடங்களில் நிரந்தர முகாம்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்புகள் இல்லை" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x