Published : 25 Jul 2024 05:09 AM
Last Updated : 25 Jul 2024 05:09 AM

அறநிலையத்துறை சார்பில் ரூ.35 கோடியில் 14 புதிய பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.35.57 கோடியில் 14 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.20.53 கோடியிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அறநிலையத்துறை சார்பில், கடந்த 2021 மே மாதம் முதல் தற்போது வரை 1,921 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதுடன், கோயில்களுக்கு சொந்தமான ரூ.6,075 கோடி மதிப்பிலான 6,597.59 ஏக்கர் சொத்துகளும் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் மேலும், புதிதாக 9 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டமும் 17 கோயில்களில் ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஈரோடு சென்னிமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில்,கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் கோயில், தூத்துக்குடி குலசேகரப்பட்டினம், முத்தாரம்மன் கோயில், திருச்சிராப்பள்ளி ரங்கம், காட்டழகிய சிங்கர் கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார், ஆதிகேசவப் பெருமாள் கோயில், விவேகானந்தபுரம், சக்கர தீர்த்த விஸ்வநாதர் கோயில், சென்னை மயிலாப்பூர், திருவள்ளுவர் கோயில், நாமக்கல் திருச்செங்கோடு, அருள்மிகு அத்தனூரம்மன் கோயில்களில் ரூ.35.57 கோடியில் 14 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

மேலும், மயிலாடுதுறை மாவட்டம் மேலையூர், பூம்புகார் கல்லூரி, தேனி மாவட்டம் வீரபாண்டி, கவுமாரியம்மன் கோயில், பெரியகுளம், மூங்கிலனை காமாட்சியம்மன் கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், சென்னை கொசப்பேட்டை, கந்தசாமி ஆதி மொட்டையம்மன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், காரைக்குடி, கொப்புடைய நாயகியம்மன் கோயில், விருதுநகர் பெத்தவநல்லூர், மாயூரநாதசுவாமி கோயில், குற்றாலம்,  பராசக்தி மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர் மாவட்டம், சுப்பிரமணிய சுவாமி கோயில், திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் என மொத்தம் ரூ.20.53 கோடியில் முடிக்கப்பட்ட 13 திட்டப் பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்.

மேலும், கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் அய்யர்மலை, ரத்தினகிரீஸ்வரர் கோயில் 1,178 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு வரும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில்ரூ.6.70 கோடி செலவில் கம்பிவட ஊர்தி அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ரூ.2.40 கோடி செலவில்காத்திருப்பு அறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், கட்டணச் சீட்டு மையம் போன்ற அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரூ.9.10 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கம்பிவட ஊர்தி, அடிப்படை வசதிகளை முதல்வர் திறந்து வைத்தார்.

பணி நியமன ஆணை: இந்து சமய அறநிலையத்துறையின் சார்நிலைப் பணியில் செயல் அலுவலர் நிலை-1 பணியிடத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 10 பேருக்கு முதல்வர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, துறையின் செயலர் பி.சந்திரமோகன், ஆணையர் பி.என்.ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x