Published : 26 Aug 2014 08:50 AM
Last Updated : 26 Aug 2014 08:50 AM

அழகிரி விவகாரத்தில் ஸ்டாலினை சமாதானப்படுத்த கருணாநிதி திட்டம்: ‘டெசோ’ கூட்டத்துக்கு வரும் தலைவர்களை பேச வைக்க முடிவு

அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்கும் விவகாரத்தில் ஸ்டாலினை சமாதானப்படுத்த திமுக தலைவர் கருணாநிதி முயன்று வருகிறார்.

இதன் ஒருபகுதியாக டெசோ கூட்டத்துக்கு வரும் வீரமணி உள்ளிட்ட தலைவர்களை ஸ்டாலி னுடன் பேச வைக்க கருணாநிதி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. கடந்த வாரம் தனது தாயார் தயாளு அம்மாளை அழகிரி சந்தித்துப் பேசியுள்ளார். ஒரு வாரமாக சென்னையில் முகாமிட்டு, தனது சகோதரி செல்வி மூலம் திமுகவில் சேர்வது குறித்து பேச்சு நடத்தியதாகவும், சில நிபந்தனைகளுடன் அவரை கட்சியில் சேர்க்க கருணாநிதி சம்மதித்து விட்டதாகவும் தகவல் கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட அழகிரியின் ஆதரவாளரான கே.பி.ராமலிங்கம் எம்.பி., சமீபத் தில் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். இதனால், எப்போது வேண்டுமானாலும் அழகிரியை திமுகவில் சேர்க்கும் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. ஆனால், கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் சம்மதிக்கவில்லை என கூறப் படுகிறது. அதனால், ஸ்டாலினை சமாதானப்படுத்தும் முயற்சிகளை கருணாநிதி மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், கருணாநிதி தலைமையில் டெசோ அமைப்பின் அவசரக் கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது.

இதில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின், தி.க. தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட டெசோ உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

கூட்டம் குறித்து திமுக முக்கிய நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

இலங்கையின் தமிழர் தேசிய கூட்டமைப்பினர், டெல்லி வந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளனர். இதனால், இலங்கை விவகாரத்தில் சில முக்கிய முடிவுகளை மத்திய அரசு எடுக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, சில முக்கிய தீர்மானங் களை நிறைவேற்றி மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்க டெசோ கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

கூட்டத்துக்கு வரும் ஸ்டாலினி டம் அன்பழகன், கி.வீரமணி உள்ளிட் டோர் அழகிரி விவகாரத்தில் சமாதானப் பேச்சு நடத்தக்கூடும். இதைத் தொடர்ந்து, ஸ்டாலின் சம்மதத்துடன் அழகிரியை கட்சியில் சேர்க்கும் முடிவை தலைமை மேற்கொள்ளும். அழகிரி ஆதரவாளர்களும் அந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.

இவ்வாறு திமுக நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.

இன்று டெசோ அவசரக் கூட்டம்

திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் டெசோ அமைப்பின் அவ சரக் கூட்டம், சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பு (டெசோ), திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்காக இந்த அமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் டெசோவின் அவசரக் கூட்டம், சென்னையில் இன்று நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்தி யில், ‘டெசோ அமைப்பின் அவசரக் கூட்டம், கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு கூடுகிறது. இதில் டெசோ உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x