Published : 25 Jul 2024 06:06 AM
Last Updated : 25 Jul 2024 06:06 AM

ரூ.6,362 கோடி மதிப்பிலான திட்டங்களை நிறைவேற்ற தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்: ரயில்வே அமைச்சர் வலியுறுத்தல்

சென்னை: இந்த ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தியுள்ளார்.

2024-2025-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நேற்று பேட்டியளித்தார். அப்போது தமிழக ரயில்வே திட்டங்களுக்கான ஒதுக்கீடு குறித்து அவர் கூறியதாவது:

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டுக்கான ஒதுக்கீடு சராசரியாக ரூ.879 கோடி என்ற அளவில் இருந்து வந்தது. ஆனால், இந்த ஆண்டு பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒதுக்கீட்டை விட 7 மடங்கு அதிகம்.

தற்போது பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அம்ரூத் பாரத் திட்டத்தின்கீழ் 70 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ரயில்வே திட்டங்களுக்கு தேவைப்படும் நிலங்களை விரைவாக கையகப்படுத்தி கொடுத்தால் அத்திட்டங்களை விரைவாக நிறைவேற்ற முடியும். அந்த வகையில் தமிழக ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற 2749 ஹெக்டர் நிலம் தேவை. ஆனால், வெறும் 807 ஹெக்டர் நிலம் மட்டுமே தற்போது உள்ளது.

நிலங்களை கையப்படுத்த தமிழக அரசின் ஆதரவு தேவை. தேவையான நிலங்கள் கிடைக்காததால் தமிழ்நாட்டில் ஏராளமான ரயில்வே திட்டங்கள் நிலுவையில் உள்ளன. ரயில்வே திட்டங்களை நிறைவேற்றும்போது எந்த மாநிலத்துக்கும் பாகுபாடு காட்டக்கூடாது என்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார்.

திட்டங்களுக்கு தேவையான நிலம் கிடைக்கப்பெற்றால் தமிழகத்துக்கான நிதியை இன்னும் அதிகரிக்க முடியும். ராமேசுவரம் -தனுஷ்கோடி ரயில்வே திட்டத்தை தமிழக அரசு நிராகரித்துவிட்டது. இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகத்துக்கு தமிழக அரசிடமிருந்து அதிகாரப்பூர்வமாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

ஒரு கூட்டாட்சியில் மத்திய அரசும், மாநில அரசுகளும் நன்கு ஒத்துழைப்பு அளித்து செயல்பட வேண்டும். எனவே, ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அம்மாநில அரசுகளிடமிருந்து எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கிறது.

ஒட்டுமொத்த ரயில்வே ஒதுக்கீட்டில் ரூ.1.9 லட்சம் கோடி ரயில்வே பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வேயில் பணிநியமனங்களை பொருத்தவரையில் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 4 லட்சத்து 11 ஆயிரம் பணியாளர்கள் ரயில்வேயில் நியமிக்கப்பட்டனர். ஆனால், பாஜக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் 5 லட்சத்து 2 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x