Published : 25 Jul 2024 05:48 AM
Last Updated : 25 Jul 2024 05:48 AM

போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட 4 பேரிடம் ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்த இடத்தில் விசாரணை

கோப்புப் படம்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட 4 பேரையும், கொலை நடந்த இடத்துக்கு தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம் உட்பட 16 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

கொலை தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என பல தரப்பட்டவர்கள் அடுத்தடுத்து சிக்கியதால் வழக்கில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. கொலைக்காக ரூ.1 கோடி வரை பணம் கைமாறிய விவகாரமும் வெளியானது.

மையப்புள்ளி யார்? - கொலையாளிகள், பணம்கைமாற்றியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் திரை மறைவில் இருந்து மூளையாக செயல்பட்டு, திட்டமிட்டு, பணம் மற்றும் சட்ட உதவி செய்தவர்கள் யார் என்ற கேள்விக்கு மட்டும் துல்லியமான விடை இதுவரை கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மாறாக ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழி, சிறையில் உள்ள ஆயுள் சிறை கைதி தலையிட்டு கொலை சம்பவத்தை மேற்பார்வை செய்தார் என ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொத்தாம் பொதுவாக யூகத்தின் அடிப்படையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், கொலைக்கான மையப்புள்ளி இன்னும் கண்டறியப்படவில்லை எனத் தெரிகிறது.

வழக்கறிஞரிடம் விசாரணை: இந்த உண்மையை கண்டறியவே கைது செய்யப்பட்ட பொன்னை பாலு, ராமு, அருள் ஆகிய 3 பேரையும் 2-வது முறையாக தற்போது போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இதே போல் கொலையாளிகளுக்கு பணம் கைமாற்றிக் கொடுத்ததாக கூறப்படும் வழக்கறிஞர் ஹரிகரனிடமும் போலீஸார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், போலீஸ் காவலில் எடுக்கப்பட்டவர்களை கொலை நடைபெற்ற பெரம்பூர் மற்றும் புழல் உட்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், கொலைக்கான சதித்திட்டம் தீட்டப்பட்ட இடங்களுக்கும் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், ஆந்திராவில் பதுங்கியதாக கூறப்படும் ரவுடி சீசிங் ராஜாவை தனிப்படை போலீஸார் நேற்று நெருங்கிய நிலையில் அவர் மீண்டும் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x