Published : 24 Jul 2024 08:52 PM
Last Updated : 24 Jul 2024 08:52 PM
பழநி: பழநியில் பலத்த சூறைக்காற்று வீசியதில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அரசுப் பேருந்தின் மேற்கூரை பறந்து கீழே விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்தனர்.
பழநி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை முதலே காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. பிற்பகல் 2 மணிக்கு மேல் திடீரென பலத்த சூறைக்காற்று வீசியது. சூறைக்காற்றுக்கு பழநி திருவள்ளூர் சாலையில் இருந்த வேப்ப மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதில், அப்பகுதியில் இருந்த தள்ளுவண்டி கடை நொறுங்கி சேதமானது.
மேலும், மரம் விழுந்ததால் அச்சாலையில் போக்குவரத்து பாதித்தது. சம்பவ இடத்துக்குகு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் ஒரு மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. இதேபோல், பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன. பழநி அருகேயுள்ள தட்டான்குளத்தில் ஒரு வீட்டின் மேற்கூரை கீழே விழுந்து சேதமடைந்தது.
பலத்த காற்றின் காரணமாக, பழநி நகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது. இதனிடையே, கீரனூரில் இருந்து பழநிக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்து நரிக்கல்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது பலத்த காற்று வீசியதில் பேருந்தின் மேற்கூரை பறந்து கீழே விழுந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து பயத்தில் கூச்சலிட்டனர். இதையடுத்து, ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தி, பயணிகள் கீழே இறங்கினார். உடனடியாக இறக்கிவிடப்பட்டதால் பயணிகள் காயமின்றி தப்பினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...