Published : 24 Jul 2024 08:35 PM
Last Updated : 24 Jul 2024 08:35 PM
சென்னை: அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தில் (ஃபெமா) அமலாக்கத் துறை பிறப்பித்த சம்மனை எதிர்த்து திமுக எம்பி-யான ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரை மையமாகக் கொண்ட சில்வர் பார்க் என்ற தனியார் நிறுவனத்தின் 70 லட்சம் பங்குகளை திமுக எம்பி-யான ஜெகத்ரட்சகன் கடந்த 2017-ம் ஆண்டு ஜூனில் ரூ. 32.69 கோடி மதிப்பில் வாங்கியுள்ளார். இதில் 45 லட்சம் பங்குகளை தனது மனைவி அனுசுயா பெயருக்கும், 22.5 லட்சம் பங்குகளை மகள் ஸ்ரீநிஷா பெயருக்கும், 2.5 லட்சம் பங்குகளை மகன் சந்தீப் ஆனந்த் பெயருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாற்றியுள்ளார். ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினரின் இந்த பரிவர்த்தனைகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக நடந்துள்ளதாகவும் இதுதொடர்பாக விளக்கமளிக்கக் கோரியும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 2022-ம் ஆண்டு நோட்டீஸ் பிறப்பித்தனர்.
இந்த நோட்டீஸை எதிர்த்து ஜெகத்ரட்சகன், அவரது மனைவி, மகள், மகன் மற்றும் அவருக்கு சொந்தமான அக்கார்டு மதுபான நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்தாண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். சேஷசாயி, “சட்டவிதிமுறைகளை பின்பற்றியே அமலாக்கத்துறையினர் இந்த நோட்டீஸை பிறப்பித்துள்ளனர். எனவே இதில் நீதிமன்றம் தலையிட முடியாது” எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வந்தது. இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், அமலாக்கத் துறையினர் சட்டத்துக்குட்பட்டு இந்த நோட்டீஸ் மீதான நடவடிக்கையை தொடரலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. அதேசமயம் விசாரணையை விரைந்து முடிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT