Published : 24 Jul 2024 05:45 PM
Last Updated : 24 Jul 2024 05:45 PM

திருச்சி - புதுக்கோட்டை எல்லையில் இருப்பதால் தனித்து விடப்பட்ட ‘தீவு’ கிராமங்கள்!

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள கொட்டப்பட்டு.

திருச்சி: திருச்சி- புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் இருக்கும் 3 கிராமங்கள் தனித் தீவு போல இருப்பதால், எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் பரிதவித்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் மணிகண்டம் ஒன்றியம் அளுந்தூர் ஊராட்சியில் கொட்டப்பட்டு, செவந்தியாணிப்பட்டி, அய்யன்தோப்பு ஆகிய 3 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த 3 கிராமங்களும் புதுக்கோட்டை மாவட்ட எல்லையையொட்டி அமைந்துள்ளன. மேலும், இந்த கிராமங்களைச் சுற்றிலும் புதுக்கோட்டை மாவட்ட கிராமங்கள் சூழ்ந்துள்ளதால், இவை திருச்சி மாவட்டத்திலிருந்து துண்டாக தனித்து விடப்பட்டுள்ளன. இதனால், இந்த கிராமங்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக கிடைப்பதில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து இந்த கிராமங்களைச் சேர்ந்த ஜேம்ஸ், ஆரோக்கியராஜ், செபாஸ்டின் மற்றும் வார்டு உறுப்பினர் பிலவேந்திரன் உள்ளிட்டோர் கூறியதாவது: திருச்சி மாவட்டத்திலிருந்து துண்டாக தனித்து இருப்பதால், மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள எங்கள் கிராமங்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. விவசாய குளங்களும் கடந்த 25 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் உள்ளன.

இந்த 3 கிராமங்களுக்கும் சேர்த்து ஒரே இடத்தில் ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து விநியோகிக்கப்படும் குடிநீரும் உப்பாக உள்ளது. இதை, கால்நடைகள் கூட அருந்துவதில்லை. மேலும், கொட்டப்பட்டு கிராமத்துக்கு மட்டும் அமைத்துள்ள காவிரி குடிநீர் குழாயிலும் சரிவர குடிநீர் வருவதில்லை. எனவே, குடிநீருக்காக அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கிராம பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த
கொட்டப்பட்டு உள்ளிட்ட கிராம மக்கள் .

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், குடிநீர் உப்பாக இருப்பதால், இப்பகுதி மக்களில் பலர் சிறுநீரக கோளாறு உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் உயிரிழந்தும் உள்ளனர். எனவே, காவிரி ஆறு ஓடும் மாவட்டத்தில் உள்ள எங்கள் கிராம மக்களுக்கு இன்று வரை நீடிக்கும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

மேலும், எங்கள் கிராமங்களுக்கு பொதுவாக உள்ள சின்ன குளம், பெரிய குளம் மூலம் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தன. ஆனால், தற்போது, குளங்கள் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையால் குளங்களின் கரைகளில் உள்ள 3 மதகுகள் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தால், போதிய நிதி இல்லாததால் பணிகளை செய்ய இயலவில்லை என தெரிவிக்கின்றனர். ஊராட்சி நிர்வாகம் எங்களை கைவிட்ட நிலையில், தீவு போல உள்ள எங்கள் கிராமங்களை மாவட்ட நிர்வாகம் மனது வைத்து காக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இந்த பிரச்சினை குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமாரிடமும் இப்பகுதி மக்கள் புகார் மனு அளித்துள்ளனர். எப்போது தங்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் இந்த 3 கிராம மக்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x