Published : 24 Jul 2024 02:44 PM
Last Updated : 24 Jul 2024 02:44 PM

“இதுவரை 250 மீனவர்கள் கைது; உடனடி நடவடிக்கை தேவை” - ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: “இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது ஜூலை 22-ம் நாள் வரை மட்டும் 250 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில், ஒரு ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மிக அதிகபட்ச கைது எண்ணிக்கை இது. இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் 22-7-2024 அன்று IND-TN-10-MM-2517 மற்றும் IND-TN-10-MM-284 பதிவு எண்கள் கொண்ட மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், அவர்களும், அவர்களது மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது ஜூலை 22-ம் நாள் வரை மட்டும் 250 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில், ஒரு ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மிக அதிகபட்ச எண்ணிக்கை இது.

மீனவர்கள் இதுபோன்று அச்சுறுத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகள், கருவிகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து தடையின்றி நடைபெற்று வருகிறது. இதனால் மீனவ மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, இந்த நிலைமையைத் தணித்திட உரிய தூதரக முயற்சிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென்றும், பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து இலங்கையிலிருந்து 87 மீனவர்களையும், 175 படகுகளையும் விரைவாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உங்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x