Published : 24 Jul 2024 02:04 PM
Last Updated : 24 Jul 2024 02:04 PM

நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் புறக்கணித்தால் தமிழக மக்களுக்கே பாதிப்பு: அண்ணாமலை

சென்னை: நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தால் பாதிக்கப்படுவது தமிழக மக்களே என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நமது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நேற்றைய தினம் தாக்கல் செய்துள்ளது. ஏழை எளிய மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பயனடையும்படி, வெகு சிறப்பானதாக அமைந்துள்ள இந்த நிதி நிலை அறிக்கையில், தமிழ்நாடு என்ற பெயர் இடம்பெறவில்லை என்று காரணம் கூறி, அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கவுள்ளதாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சொல்லியிருப்பது நகைப்புக்குரியது.

நிதிநிலை அறிக்கை உரையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களுக்கான நலத்திட்டங்களைத் தவிர, பிற மாநிலங்களுக்கு எந்த நலத்திட்டங்களும் கிடைக்கப்பெறாது என்ற தோற்றத்தை ஏற்படுத்த, முதல்வர் ஸ்டாலின் முயற்சிக்கிறார்.

திமுக, மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கடந்த 2004 முதல் 2014 வரை பத்து ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது, தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில், 6 ஆண்டுகள், தமிழகத்தின் பெயர் இடம்பெறவில்லை. அந்த 6 ஆண்டுகளும், காங்கிரஸ் திமுக கூட்டணியிலான மத்திய அரசு, தமிழகத்துக்கு எந்தத் திட்டங்களும் வழங்கவில்லை என்று கூறுவாரா?

பிரதமர் நரேந்திர மோடி அரசு, கடந்த 2014 முதல் 2024ஆம் ஆண்டு வரை பத்து ஆண்டுகளில், நிதிநிலை அறிக்கையின் மூலமாக தமிழகத்திற்கு வழங்கிய நலத்திட்டங்களில் பத்தில் ஒரு பங்கு கூட, திமுக காங்கிரஸ் கட்சியின் கூட்டணி, ஆட்சியிலிருந்தபோது அறிவிக்கப்படவில்லை என்பது, முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்குத் தெரியுமா?

மாநிலங்களின் நலனுக்காக, மத்திய அரசுடன் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொண்டு, தமிழகத்தின் தேவைகளை எடுத்துக் கூறி, நலத்திட்டங்களைப் பெறுவதை விட்டுவிட்டு, கூட்டத்தைப் புறக்கணிக்கிறோம் என்று நாடகமாடி, யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் முதல்வர்?

தொகுதியின் தேவைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடந்த 5 ஆண்டுகளில், நாடாளுமன்றத்தில் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்சினைகளைக் குறித்துப் பேசவே இல்லை என்பதுதான் உண்மை. தற்போது முதலமைச்சர்கள் கூட்டத்தையும் புறக்கணிக்க முடிவு செய்தால், பாதிக்கப்படுவது தமிழக மக்களே.

முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு நாள் விளம்பரத்துக்காக இது போன்ற வீண் நாடகங்களை அரங்கேற்றுவதை நிறுத்திவிட்டு, தமிழகத்தின் நலனை முன்னிறுத்தி ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனது பதவின் கீழ் அண்ணாமலை வெளியிட்டுள்ள அட்டவணையில், 2004 முதல் 2014 வரையிலான 10 ஆண்டு கால காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் தமிழகத்துக்கு சிறப்பு திட்டங்கள் மூலம் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு ரூ. 8,054 கோடி என்றும், மோடி அரசின் 10 ஆண்டு கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ரூ. 1,05,150 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x