Last Updated : 24 Jul, 2024 11:30 AM

2  

Published : 24 Jul 2024 11:30 AM
Last Updated : 24 Jul 2024 11:30 AM

“தமிழையும், தமிழகத்தையும் மறந்தும்கூட உச்சரிக்காத நிதியமைச்சர்” - நவாஸ்கனி எம்.பி. விமர்சனம்

புதுடெல்லி: தமிழையும் தமிழ்நாட்டினையும் மறந்தும்கூட உச்சரிக்காமல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தவிர்த்திருப்பதாக ராமநாதபுரம் எம்.பி-யும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநிலத் துணைத் தலைவருமான கே.நவாஸ்கனி விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட் குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி-யான கே.நவாஸ்கனி கூறிருப்பதாவது: "நாடாளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கை 2024-25 தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது, பாஜக அரசின் அரசியல் லாபத்துக்காக ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற காரணத்துக்காக தாக்கலாகி உள்ளது. பிஹார் மற்றும் ஆந்திர பிரதேசத்துக்கு மட்டும் சிறப்பு திட்டங்கள் அனுமதிக்கப்பட்டு, தமிழகம் உள்ளிட்ட பெரும்பான்மை மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.

மத்திய நிதியமைச்சர் இதுவரை தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைகளில் பெயரளவிலாவது தமிழும், தமிழகமும் இடம்பெறும். அதனைக் கூட தற்போதைய நிதிநிலை அறிக்கையில் தவிர்த்து இருக்கிறார் நிதியமைச்சர்.

மேற்கோள் காட்டுவதற்காக வழக்கமாக பயன்படுத்தப்படும் திருக்குறள் உட்பட அனைத்தையும் தவிர்த்து இருக்கிறார் நிதியமைச்சர். இயற்கை சீற்றங்கள், தமிழகத்திற்கான நிலுவை நிதி, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயிலுக்கான நிதி உட்பட தமிழகத்திற்காக எதுவும் குறிப்பிடாமல் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இதுபோல், தமிழகத்துக்கு எந்த அறிவிப்பும் இல்லாமல் ஏமாற்றம் அளிக்கப்பட்டிருக்கிறது. இது தமிழகத்தின் மீதான மத்திய அரசின் மாற்றான் தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.

நிதிநிலை அறிக்கையில் நான்கு கோடி வேலைவாய்ப்புகள் என கவர்ச்சிகரமான அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே 2014-ல் 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என பாஜக அறிவித்த அறிவிப்பே என்ன ஆனது?. இந்த நிலையே அறியாது இருக்கும் பொழுது, புதிதாக நான்கு கோடி வேலைவாய்ப்பு என அறிவிக்கப்பட்டிருப்பது யாரை ஏமாற்றும் திட்டம். தொடர்ந்து ரயில் விபத்துக்கள் நாடெங்கும் நடந்து கொண்டிருக்கிறது.

இச்சூழலில், தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ரயில்வே குறித்து ஒரு வரி கூட குறிப்பிடாதது எந்த வகையில் நியாயம்? வழக்கம்போல சிறுபான்மையினர் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களுக்கும் இந்த பட்ஜெட்டின் மூலம் ஏமாற்றத்தையே தந்திருக்கிறது பாஜக அரசு.

இந்த நிதிநிலை அறிக்கை பாஜக அரசின் ஆட்சியை பாதுகாக்கும் அரசியலை வெளிப்படுத்துகிறதே தவிர, நாட்டு நலனையும், நாட்டு மக்களின் நலனையும் முன்னிறுத்தவில்லை. தமிழகத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் பாஜகவை, தமிழக மக்களும் தொடர்ந்து புறக்கணிப்பார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x