Published : 24 Jul 2024 11:21 AM
Last Updated : 24 Jul 2024 11:21 AM

முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை; தேர்ச்சிக் கடிதங்களை உடனே வழங்குக: அன்புமணி

ராமதாஸ்

சென்னை: முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு 4 மாதங்களாகியும் தேர்ச்சிக் கடிதம் வழங்காமல் மாணவர்களை அலைக்கழிப்பதா? என்று பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “முனைவர் ஆராய்ச்சிப் பட்டப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.25,000 வீதம் உதவித்தொகை வழங்குவதற்கான முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தின்படி தகுதியான மாணவர்கள் போட்டித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்ட நிலையில், அதன் பின் 4 மாதங்களாகியும் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தேர்ச்சிக் கடிதம் இன்று வரை வழங்கப்படவில்லை.

அதனால் தேர்ந்தெடுக்கப்பட்டும் ஆராய்ச்சிப் படிப்பை தொடங்க முடியாமலும், உதவித்தொகை பெற முடியாமலும் மாணவர்கள் தவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் கல்லூரிக் கல்வி இயக்கநரகம் காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழு நேர முனைவர் ஆராய்ச்சிப் பட்டப் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவும் நோக்குடன் முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் கலைப் பிரிவில் 60 மாணவர்கள், அறிவியல் பிரிவில் 60 மாணவர்கள் என மொத்தம் 120 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு ஆராய்ச்சிப் படிப்புக்கான உதவியாக மாதந்தோறும் ரூ.25,000 வீதமும், எதிர்பாரா செலவினங்களுக்காக கலைப்பிரிவு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000, அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு ரூ.12,000 வீதம் அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை பெறத் தகுதியுடைய மாணவர்கள் போட்டித்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர். 2023-24 ஆம் ஆண்டில் உதவித்தொகை பெறுவதற்கான அறிவிக்கை கடந்த அக்டோபர் 16-ஆம் நாள் வெளியிடப்பட்டு, டிசம்பர் 17-ஆம் நாள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது.

விண்ணப்பித்த 4004 பேரில் 2311 பேர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் திசம்பர் 29-ஆம் நாள் வெளியிடப்பட்டு, கல்லூரிக் கல்வி இயக்குநரகம் மூலம் மார்ச் 15-ஆம் நாள் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட 120 மாணவ, மாணவியரின் பட்டியலும் வெளியிடப்பட்டது. ஆனால், அதன்பின் 4 மாதங்களாகியும் அவர்களுக்கு தேர்ச்சிக் கடிதம் வழங்கப்படவில்லை.

தேர்ச்சிக் கடிதம் வழங்கப்பட்டால் தான் அதைக் காட்டி மாணவர்கள் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் முனைவர் ஆராய்ச்சிப் படிப்பில் சேர முடியும். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் அவர்கள் முனைவர் படிப்பில் சேர முடியாவிட்டால், அவர்கள் தேர்ச்சி பெற்றதற்கு பயனில்லாமல் போய்விடும்.

அதற்கான காலக்கெடு நிறைவடைய இன்னும் 50 நாட்கள் கூட இல்லாத நிலையில், தேர்ச்சிக் கடிதம் வழங்கப்படாததால் மாணவர்கள் முனைவர் பட்டப் படிப்பில் சேர முடியவில்லை. தேர்ச்சிக் கடிதம் எப்போது கிடைக்கும் என்பதற்கு கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகத்திலிருந்து சரியான பதில் வழங்கப்படவில்லை.

முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கான 120 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்ட நிலையில், அவர்களுக்கு தேர்ச்சிக் கடிதம் வழங்குவதில் என்ன சிக்கல் இருக்கிறது? என்பது தெரியவில்லை. ஓர் எழுத்தரின் உதவியுடன் 2 மணி நேரத்தில் வழங்கிவிடக் கூடிய தேர்ச்சிக் கடிதங்களை 4 மாதங்களாக வழங்காமல் இருப்பதன் மர்மம் புரியவில்லை.

ஒருவேளை தேர்தல் நடத்தை விதிகள் தான் தாமதத்திற்கு காரணம் என்று அரசுத் தரப்பில் கூறப்படும் என்றால், நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டு 50 நாட்களுக்கு மேலாகி விட்டது. ஆனாலும் தேர்ச்சிக் கடிதங்கள் வழங்கப்படாதது ஏன்? என்பதை தமிழக அரசு தான் விளக்க வேண்டும்.

மாணவர்களின் ஆராய்ச்சி சார்ந்த இந்த விஷயத்தில் தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டி, மாணவர்களை அலைக்கழிக்கக் கூடாது. முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் அடுத்த ஓரிரு நாட்களுக்குள் தேர்ச்சிக் கடிதங்களை வழங்கி, அவர்கள் குறித்த காலத்தில் முனைவர் பட்டப் படிப்பில் சேருவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x