Published : 24 Jul 2024 04:44 AM
Last Updated : 24 Jul 2024 04:44 AM

மத்திய பட்ஜெட்: அரசியல் தலைவர்களின் வரவேற்பும், விமர்சனமும்

சென்னை: மத்திய நிதிநிலை அறிக்கை தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பையும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தமிழகத்துக்கு எந்தவிதமான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்பது தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது. திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், தமிழகத்துக்கு எந்த ஒரு திட்டத்தையும் பெற்றுத் தராதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிஎம்.பி-க்கள் கடந்த காலங்களை போல, தமிழகத்தின் நன்மைக்காக முயற்சிமேற்கொள்ளாமல் இருந்ததுபோல், அமைதியாக காலம்தள்ளுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: மாநிலங்களுக்கான வரிப் பங்கீட்டை ரூ.23.49 லட்சம் கோடியாக உயர்த்தியதன் மூலம் தமிழகமும் பெரும் பலனடையும். இதனை முதல்வர் ஸ்டாலின் மாநில நலனுக்காக முறையாகப் பயன்படுத்த வேண்டும். நிதிநிலை அறிக்கையை, தமிழக பாஜக சார்பில் மகிழ்ச்சியுடன் வரவேற்பதோடு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மக்களுக்கு ஆதரவான நிலையில் மத்திய அரசு இருப்பதை நிதிநிலை அறிக்கை படம்பிடித்துக் காட்டுகிறது. பொருளாதாரத்தில் முக்கியக் கவனத்தை செலுத்தும் அதே நேரத்தில் மக்களின் அதிக எதிர்பார்ப்புகளை உள்ளடக்கிய, மிகவும் பொறுப்பு வாய்ந்த அறிக்கையாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. இந்த நிதிநிலை அறிக்கை நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான வலுவான ஆதாரத்தை கொடுக்கும். நம்புகிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: தமிழக முதல்வர் விடுத்த கோரிக்கையின்படி வெள்ள நிவாரண நிதியோ, மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியோ முற்றிலும் வழங்கப்படாமல் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. தமிழகம் என்ற ஒரு வார்த்தை கூட இல்லாதது பிரதமரின் கபட நாடகத்தை அம்பலமாக்கியுள்ளது. இளைஞர்களுக்கு ஊக்கத் தொகையுடன் பயிற்சி உள்ளிட்ட காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. அதே நேரம், வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாத, பிற்போக்குத்தனமான நிதிநிலை அறிக்கை என்பதால் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: தங்கம், செல்போன் உள்ளிட்டவை மீதான சுங்கவரி குறைப்பு, இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக புதிய திட்டங்கள் போன்றவை வரவேற்கத்தக்கவை. பழைய வருமானவரி முறையில் எந்த மாற்றமும் செய்யப்படாததும், தமிழகத்தின் வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாததும் ஏமாற்றம் அளிக்கின்றன.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியதாகும். அனைத்து தரப்பினரும் நிதிநிலை அறிக்கைக்கு எதிராக கண்டனக் குரலை எழுப்ப வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: அனைத்து வகைகளிலும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பது, பெரும் கண்டனத்துக்குரியதாகும். மூன்றாம் தடவையும் கூட ஆட்சிக்கு வருவதற்கு வாக்களித்த சாதாரண மக்களுக்கு இது வஞ்சனை புரிந்திருக்கிறது.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: ஜிஎஸ்டியை திரும்பப் பெறுவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்து தமிழகத்தை மட்டும் வஞ்சிக்கக்கூடிய பட்ஜெட், பெரும் கண்டனத்துக்குரியது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: சிறப்பு திட்டங்கள் தொடர்பான தமிழக முதல்வரின் கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டிருக்கின்றன. கோவை மாவட்ட தொழில் துறை வளர்ச்சிக்கு திட்டங்கள் எதுவும் இல்லாததும் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: இந்த பட்ஜெட்டால் தமிழகத்தில் கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மேம்படும். எனவே, தமாகா சார்பில் அறிக்கையை வரவேற்று, மத்திய நிதி அமைச்சரை வாழ்த்துகிறேன்.

விசிக தலைவர் திருமாவளவன்: ஆட்சியை தக்க வைக்கும் அச்சத்தில் தயாரிக்கப்பட்ட பட்ஜெட். தென்னிந்திய மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. வாக்களிக்காதவர்களை இந்தியர்களாக பாஜக அரசு கருதவில்லை. இது கண்டனத்துக்குரியது.

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை முற்று முழுதாக புறக்கணித்து தயாரிக்கப்பட்டுள்ள, இந்நிதிநிலை அறிக்கையிலிருந்து இந்தியா முழுமைக்குமான பாஜகவின் வீழ்ச்சி உறுதியாய் தொடங்கும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியை உள்ளடக்கிய மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை வரவேற்புக்குரியது. தமிழகத்துக்கு சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: என்டிஏ பட்ஜெட் தாக்கல் செய்தமைக்கு வாழ்த்துகள். இந்தியாவுக்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படும் என நம்புகிறேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x