Published : 24 Jul 2024 06:21 AM
Last Updated : 24 Jul 2024 06:21 AM
சென்னை: வணிகத்துக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதுதான் தமிழக அரசின் கொள்கை என்றும், வணிகர்கள் கடைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதை தாமாக முன்வந்து செய்ய வேண்டும் என்றும் வணிகர்கள் நலவாரிய கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்
நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில்தான், வணிகர்கள் நலனுக்காக வணிகர்கள் நலவாரியம் கடந்த 1989-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தோற்றுவிக்கப்பட்டது. தற்போது வணிகர்கள் நலவாரியம் முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைவராகவும், அமைச்சர் பி.மூர்த்தியை துணைத் தலைவராகவும் கொண்டு இயங்கி வருகிறது.
இதன்கீழ், வணிகவரித்துறை செயலர், ஆணையர், நிதித்துறை, தொழிலாளர் நலத்துறை செயலர்கள் உறுப்பினர்களாகவும், உறுப்பினர் செயலராக வாரியத்தின் முதன்மை செயல் அலுவலரும் உள்ளனர். இவ்வாரியம் தொடங்கப்பட்டபோது உறுப்பினர்களாக 20 பேர் இருந்த நிலையில், தற்போது 30-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வாரியத்தின் கூட்டம் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. இதில், முதல்வர் பேசியதாவது:
இந்த வாரியம் தொடங்கப்பட்டபோது, தொடக்க நிதியாக ரூ.2 கோடி இருந்தது. இது, 2012-ம் ஆண்டில் ரூ.5 கோடியாகவும் 2017-ம் ஆண்டு ரூ.10 கோடியாகவும் உயர்த்தப்பட்டது. இப்போது, ரூ.4.05 கோடி திரட்டு நிதி கையிருப்பு உள்ளது.
திமுக ஆட்சி அமைந்ததும், 2021 ஜூலை15 முதல் அக். 14 வரை உறுப்பினர்களாக சேர கட்டணமில்லை என அறிவிக்கப்பட்டது. அதன்பின் வணிகர்கள் கோரியதால் 2022 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது. இதனால் 40,994 புதிய உறுப்பினர்கள் வாரியத்தில் இணைந்தனர். இதுவரை பதிவு பெற்ற மொத்த வணிகர்களின் எண்ணிக்கை 88,219 ஆக உயர்ந்துள்ளது. திமுக அரசு அமைந்த பின் இவ்வாரியத்தின் மூலம் ஏராளமான நலத்திட்ட முன்னெடுப்புகள் செய்யப்பட்டுள்ளன.
உயர்த்தப்பட்ட நிதி: கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை, வாரிய உறுப்பினர்களுக்கு மரணம் ஏற்பட்டால், அவர்களது குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி, வியாபார நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டால் உயர்த்தப்பட்ட ரூ.50 ஆயிரம் நிதி ஆகியவை வழங்கப்படுகின்றன.
இதுதவிர விபத்து உதவி, இதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவை சிகிச்சை, பெண்களுக்கு கர்ப்பப் பை அறுவை சிகிச்சை, விளையாட்டு வீரர்களுக்கும் நிதியுதவி என 8,883 வணிகர்களுக்கு ரூ.3.29 கோடி வழங்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புக்களால் கடைகளுக்கு ஆண்டுதோறும் என்றிருந்ததை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமம் புதுப்பிக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் கடைகளுக்கான குத்தகை 9 ஆண்டுகள் என இருந்ததை 12 ஆண்டுகள் என திருத்தம் செய்யப்பட்டு வரும் ஆக.1 முதல் நடைமுறைப்படுத்த உள்ளோம்.
அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை வைப்பதை நீங்களே முன்வந்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் வீதிகளில் தமிழை காணமுடியவில்லை என்று யாரும் சொல்லக்கூடாது. அந்த அளவுக்கு பெயர் பலகைகளில் தமிழில் மாற்ற முன் வரவேண்டும்.
உங்கள் வணிகத்துக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பது தான் தமிழக அரசின் கொள்கை. நமக்கு இடையில் இடைத்தரகர்கள் கிடையாது, இருக்கவும் கூடாது. எனவே, இதனை மனதில் வைத்து வர்த்தகமாக இல்லாமல் சேவை மனப்பான்மையுடனும் மக்களுக்கு நன்மைகளைச் செய்ய வேண்டும். உங்கள் கருத்துக்களை சொன்னால், நான் அமைச்சர், அதிகாரிகளிடம் கலந்து பேசி அதன்பின் அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதற்கு தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment