Published : 24 Jul 2024 05:52 AM
Last Updated : 24 Jul 2024 05:52 AM

லட்சத்தில் ஒருவரை தாக்கும் அபூர்வ வகை நோய் பாதித்த ம.பி பெண்: மதுரை அரசு மருத்துவர்கள் காப்பாற்றினர்

மதுரை: ஒரு லட்சம் பேரில் ஒருவரைத் தாக்கும் ‘குயில்லன் பார்ரே’ என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேச மாநிலப் பெண்ணை, மதுரை அரசு மருத்துவர்கள் காப்பாற்றினர். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜ்கனி (26). இவர், தனது கணவரின் பணிநிமித்தமாக கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பு இடம் பெயர்ந்தார்.

இந்நிலையில் 3-வது முறையாக கர்ப்பமடைந்த ராஜ்கனிக்கு, கடந்த ஜூன் 20-ம்தேதி வீட்டிலேயே ஆண் குழந்தைபிறந்தது. ஜூன் 30-ம் தேதி அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 7-ம் தேதி கை, கால்கள் செயல்படாததுடன், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயர்தர மருந்து வழங்கி... பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கு பிறகு, ராஜ்கனிக்கு `குயில்லன் பார்ரே' என்ற நோய்த் தாக்கம் (Guillain Barre syndrome) GBS-AMSAN கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் IVIG எனப்படும் உயர்தர மருந்து வழங்கி, 5 நாட்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பலனாக அவருக்கு மூச்சுத் திணறல் நீங்கி,கை, கால்கள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன. தாயும், சேயும் தற்போது நலமுடன் உள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை டீன் (பொறுப்பு) தர்மராஜ் கூறும்போது, “அரிதான இந்த நோய் 1 லட்சம் பேரில் 1.2 பேருக்கு மட்டுமே வரும். உரிய நேரத்தில் உயர்சிகிச்சை அளித்தால் மட்டுமே, நரம்பு மண்டலப் பாதிப்பில் இருந்துநோயாளி முழுமையாக விடுபட முடியும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x