Published : 24 Jul 2024 06:00 AM
Last Updated : 24 Jul 2024 06:00 AM
சென்னை: சென்னை கிண்டி கிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.240.54 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2023 ஜூன் 15-ம் தேதி திறந்து வைத்தார்.
1,000 படுக்கை வசதிகள்கொண்ட இந்த மருத்துவமனையில், இதயவியல், நரம்பியல், சிறுநீரகம், குடல் இரைப்பை, புற்றுநோய் மருத்துவம், அதுதொடர்பான அறுவை சிகிச்சைகள், மூளைரத்தநாள கதிரியல் ஆகிய உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சைக்கான வசதிகள் உள்ளன.
இந்நிலையில், இந்த மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவசரப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உடல்நிலை குறித்து விசாரித்து, நோயாளிகளின் உறவினர் களுடன் உரையாடினார்.
நரம்பியல் சிகிச்சை பிரிவுக்கு சென்று, நோயாளிகளை சந்தித்து, அவர்களுக்கு வழங்கப்படும் இயன்முறை சிகிச்சைகளை பார்வையிட்டார். ‘இதய கேத்லாப்’ ஆய்வகத்துக்கு சென்று, நோயாளிகளிடம் சிகிச்சை விவரங்கள், மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
‘‘அதிக நோயாளிகள் வந்து செல்வதால், மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள், பராமரிப்பு பணியாளர்களை நியமிக்க வேண்டும். டயாலிசிஸ் சிகிச்சை பிரிவுக்கு கூடுதல் டயாலிசிஸ் கருவிகள் வழங்க வேண்டும்’’ என்று அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.
‘‘மருத்துவமனையை தூய்மையாக, சுகாதாரமாக தொடர்ந்து பராமரிக்க வேண்டும். நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை தாமதமின்றி வழங்க வேண்டும். அத்தியாவசிய மருந்துகள் தேவையான அளவுக்கு இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்யவேண்டும்’’ என்று மருத்துவமனை யின் முதல்வர் மற்றும் மருத்துவர்களிடம் ஸ்டாலின் அறிவுறுத்தினார். மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி, சிறப்பு அலுவலர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில், ‘திறந்து வைக்கப்பட்டு ஓராண்டு கடந்த நிலையில், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஆய்வு செய்தேன்.
மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து அங்கிருந்த நோயாளிகள், அவர்களது உறவினர்கள் தெரிவித்த கருத்துகள் மனநிறைவை தந்தன. மருத்துவமனையின் தேவை குறித்து மருத்துவர்கள் வைத்த கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்று தெரி வித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT