Published : 11 May 2018 07:48 AM
Last Updated : 11 May 2018 07:48 AM

கிழக்கு கடற்கரை தொழில் வழித் தடம் திட்டத்தில் மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ரூ.6,448 கோடி மதிப்பில் பணிகள் தொடக்கம்

கிழக்கு கடற்கரை தொழில் வழித்தடம் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 13 மாநில நெடுஞ்சாலைகளை ரூ.6,448 கோடி மதிப்பில் மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

கொல்கத்தா முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை தொழில் வழித்தடம் உருவாக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொழில் வழித்தடம் உருவாக்கப்பட உள்ளது. இதன்மூலம் தமிழகத்தின் முக்கிய துறைமுகங்கள், விமான நிலையங்கள், தொழில் நகரங்கள் இணைக்கப்படும். இந்தத் திட்டத்தால் தமிழகத்தின் பல மாவட்டங்கள் பயன்பெறும்.

இந்நிலையில், கிழக்கு கடற்கரை தொழில் வழித்தடம் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 13 மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. திருச்செந்தூர் - அம்பாசமுத்திரம், மேலூர் - காரைக்குடி, தஞ்சாவூர் - மன்னார்குடி, கும்பகோணம் - மன்னார்குடி, கும்பகோணம் - சீர்காழி, திருச்செங்கோடு - ஈரோடு, செங்கல்பட்டு - காஞ்சிபுரம், செய்யூர் - போளூர், விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை, கடலூர் - மடப்பட்டு உள்ளிட்ட ஊர்களுக்கு இடையே உள்ள சாலைகள் மேம்படுத்தப்படும்.

இது தொடர்பாக ‘தி இந்து’ விடம் மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கிழக்கு கடற்கரை தொழில் வழித் தடத்தில் தமிழகத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளை இணைத்து தொழில் வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.6,448 கோடி மதிப்புக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கி கடன் உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின்கீழ் மொத்தம் 654 கி.மீ. சாலைகள் மேம்படுத்தப்படும்.

பெரும்பாலான சாலைகள் 2 வழிப்பாதையாக அமையும். முக்கிய சந்திப்புகளில் மட்டும் 4 வழிச் சாலையாக உருவாக்கப்படும். சாலையின் ஓரங்களில் இருசக்கர வாகனம் போன்ற சிறிய வகை வாகனங்கள் செல்வதற்கு தனிப் பாதை இருக்கும். இத்திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. அடுத்த 6 மாதங்களில் சாலை கட்டமைப்பு பணிகள் தொடங்கப்படும். இந்த தொழில் வழித்தடம் அமைவதால் ஏராளமான புதிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் உருவாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x