Published : 25 May 2018 07:14 AM
Last Updated : 25 May 2018 07:14 AM
‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு முடிவு செய்துள்ளது. அமைதி திரும்ப மக்கள் ஒத்துழைக்க வேண்டும்’ என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று தெரிவித்தார்.
தூத்துக்குடியில் 3-வது நாளாக நேற் றும் பதற்றம் நீடித்தது. தீ வைப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் தொடர்ந்தன. நீதிமன்ற உத்தரவால் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 100-வது நாளை எட்டியதை தொடர்ந்து கடந்த 22-ம் தேதி ஸ்டெர் லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் கலவரம் வெடித்தது. கல்வீச்சு, தீ வைப்பு சம்பவங்களைத் தொடர்ந்து, ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் போலீஸார் துப்பாக் கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 95 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீ வைப்பு, கல்வீச்சு
தூத்துக்குடியில் 3-வது நாளான நேற்று பதற்றம் சற்று தணிந்திருந்தபோதிலும் சகஜ நிலை திரும்பவில்லை. தீ வைப்பு, கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நேற்றும் நடந்தன. தூத்துக்குடி முத்தையாபுரம் போலீஸ் நிலையம் முன்பு நள்ளிரவில் சிலர் பெட்ரோல் குண்டு வீசினர்.
தூத்துக்குடி அண்ணா நகரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று முன்தினம் இரவு தீ வைக்கப்பட்டது. பிரையண்ட் நகர் மற்றும் சாயர்புரத்தில் உள்ள டாஸ் மாக் மதுபானக் கடைகளுக்கு நேற்று காலை சிலர் தீ வைத்தனர். நகரின் பல பகுதிகளில் வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த 17 கார்களின் கண்ணாடிகளை நள்ளிரவில் சிலர் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியே கலவர பூமியாக காட்சியளித்தது.
பல கோடி இழப்பு
தூத்துக்குடியில் கடைகள், வணிக நிறுவனங்கள் 3-வது நாளாக நேற்றும் அடைக்கப்பட்டிருந்தன. காமராஜ் காய் கறி மார்க்கெட் நேற்று காலை 5 மணி முதல் 9 மணி வரை திறக்கப்பட்டது. அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட்டம் அலைமோதியது. கடைகள் வணிக நிறுவனங்கள் தொடர்ந்து அடைக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
அம்மா உணவகத்தை 24 மணி நேர மும் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுபோல, பேருந்து போக்குவரத்து 3-வது நாளாக நேற்றும் தொடங்கப்படவில்லை. தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் இயங்காததால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆயிரம் போலீஸார்
தூத்துக்குடியில் ஏற்கெனவே ஏடிஜிபி விஜயகுமார் தலைமையில் 5 ஆயிரம்போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த ஆயிரம் போலீஸார் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளனர்.
இதனிடையே, தூத்துக்குடியில் நேற்று மாலை ஆட்சியர் அலுவலகத்தில், வணிகர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர், அரசியல் கட்சியினர் பங்கேற்ற அமைதிக் கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகு, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வர் ஏற்கெனவே தெரிவித்தபடி, ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையில்லாத திட்டம் வேண்டாம் என்பதுதான் அரசின் நிலைப்பாடு. நீதிமன்றத்திலும் அரசு தரப்பில், இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலையை நடத்த அரசு விரும்பவில்லை. வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதில் ஆலைக்கு எதிராகவே அரசு வாதிட்டு வருகிறது. ஆலையைத் திறப்பதற்கு இனி வாய்ப்பில்லை. மக்கள் கோரிக்கை நிவர்த்தி செய்யப்பட்டிருக்கிறது. இதை மக்கள் புரிந்துகொண்டு அமைதி திரும்ப ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT