Last Updated : 23 Jul, 2024 09:23 PM

 

Published : 23 Jul 2024 09:23 PM
Last Updated : 23 Jul 2024 09:23 PM

யாருக்கு சொந்தம்? - காங்., தமாகாவினர் மோதலால் பழநி கட்சி அலுவலகத்துக்கு சீல் வைப்பு!

பழநி: பழநியில் கட்சி அலுவலகம் யாருக்கு சொந்தம் என காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே தகராறு ஏற்பட்டதால், கட்சி அலுலகத்தை வருவாய்த் துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி ஆர்.எப் சாலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகம் உள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பிரிந்தபோது யாருக்கு அலுவலகம் சொந்தம் என்ற பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அலுவலகம் சொந்தம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின், தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகமாக கட்சியினர் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகர தலைவராக இருந்த சுந்தர், சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து, இன்று (செவ்வாய்கிழமை) மாலை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு சுந்தர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் வந்தனர்.

அப்போது, அலுவலகத்தில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கொடியை அகற்றிவிட்டு காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்றினர். இது குறித்து தகவலறிந்து வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, இரு கட்சியினரின் கூட்டணி கட்சியினரும் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வட்டாசியர் சக்திவேலன் தலைமையிலான வருவாய்த் துறையினர் மற்றும் டிஎஸ்பி தனஞ்ஜெயன் தலைமையிலான போலீஸார் அங்கு வந்தனர். அவர்கள் அலுவலகத்தில் இருந்து இரு கட்சியினரையும் வெளியேற்றி அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். மேலும், வட்டாட்சியர் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, அதில் அலுவலகம் தொடர்பான ஆவணம் யாரிடம் உள்ளதோ அவர்களிடம் அலுவலகம் ஒப்படைக்கப் படும் என கூறிவிட்டு சென்றனர். அப்போது, இரு கட்சியினரும் ஒருவரையொருவர் முறைத்து பார்த்தப்படி அங்கிருந்து கலைந்து சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x