Last Updated : 23 Jul, 2024 08:44 PM

1  

Published : 23 Jul 2024 08:44 PM
Last Updated : 23 Jul 2024 08:44 PM

நிலுவை நிதியை வழங்குக: மத்திய அமைச்சரிடம் அன்பில் மகேஸ், எம்.பி.க்கள் நேரில் கோரிக்கை

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் தமிழக அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் எம்பிக்கள்.

புதுடெல்லி: மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று சந்தித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி கனிமொழி தலைமையிலான இந்தச் சந்திப்பில், நிலுவை நிதி கோரப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், பட்ஜெட் உரை முடிந்தவுடன் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் திமுகவின் நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி தலைமையில் தமிழக குழுவினர் சந்திப்பு நடத்தினர். இதற்காக, சென்னையில் இருந்து நேற்று இரவு விமானம் மூலம் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி டெல்லி வந்திருந்தார்.

இன்று நாடாளுமன்றத்தின் கட்டிட வளாகத்திற்கு வந்தவர், தூத்துக்குடி மக்களவை தொகுதியின் உறுப்பினருமான கனிமொழி கருணாநிதியை சந்தித்தார். இவர்கள் தமிழ்நாட்டின் சில மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசினார்கள்.

இச்சந்திப்பின்போது ‘சமக்ரா சிக்‌ஷா’ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாநிலத்திற்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக வழங்குமாறு கோரப்பட்டது. இதை தமிழக மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு உடனடியாக விடுவிக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். மத்திய அமைச்சருடனான இச்சந்திப்பின்போது தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் எஸ்.மதுமதி மற்றும் மாநில திட்ட இயக்குநர் (ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி) டாக்டர் எம் .ஆர்த்தி ஆகியோரும் உடனிருந்தனர்.

முன்னதாக, தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் திமுக எம்பிக்கள் குழுவினர், நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியையும் சந்தித்தனர். இந்தச் சந்திப்பில், ராகுலிடம் நிதி நிலுவை குறித்தும், இதே பொருள் குறித்தும் விவாதித்தனர்.

தமிழ்நாடு குறித்த இந்தப் பிரச்சினையில் காங்கிரஸ், இடதுசாரி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் எம்பிக்களும் உடன் இருந்தனர். அனைவரும் இணைந்து எதிர்கட்சித் தலைவர் ராகுலிடம் பிரச்சினையை எடுத்துரைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x