Published : 23 Jul 2024 08:40 PM
Last Updated : 23 Jul 2024 08:40 PM

“மத்திய பட்ஜெட் ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிக்கும்” - கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

சென்னை: “ஒட்டுமொத்தமாக, மத்திய பட்ஜெட் ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிக்கும். மக்கள் வாழ்க்கை முன்னேற்றத்துக்கான எந்த உருப்படியான முன்னேற்றத்தையும் கொண்டு வராது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள நிதிநிலை அறிக்கை ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எந்த நிவாரணங்களையும் அளிக்கவில்லை. மாறாக கடந்த காலங்களை போலவே கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச் சலுகைகளை வழங்கி உள்ளது. தனது கூட்டணி கட்சிகளை திருப்திப்படுத்தி ஆட்சியை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கோடு ஆந்திராவுக்கும், பிஹாருக்கும் கூடுதல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதேசமயம், இந்தியாவின் இதர மாநிலங்களை புறக்கணித்துள்ளது. குறிப்பாக, எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தமிழக திட்டங்களுக்கும் நிதி ஒதுக்காமல் தமிழகத்தையே புறக்கணித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியதாகும்.

நேற்றைய தினம் வெளியிடப்பட்ட பொருளதார ஆய்வறிக்கை, தனித்த பெரும்பான்மையில் பத்தாண்டுகள் ஆட்சி செய்த மோடி அரசின் தோல்வியை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக இருந்தது. இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் 6.5 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாக வளர்ந்துள்ளது என்று பெருமை பேசிக் கொண்டாலும் துறை வாரியான, சமூக வளர்ச்சி ரீதியான புள்ளி விபரங்கள் மிகவும் கவலை அளிப்பதாகவே உள்ளன. வேலையின்மை, விலையேற்றம், நிதி பற்றாக்குறை ஆகியவை கடந்த ஆண்டு மிகவும் மோசமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தியதாக ஆய்வறிக்கை ஒப்புக் கொள்கிறது.

குறிப்பாக, உணவுப் பொருட்களின் விலையேற்றம் 2023ல் 6.6 சதவிகிதமாக இருந்தது, 2024ல் 7.5 சதவிகிதமாக உயர்ந்தது என்பது சாதாரண மக்களுடைய உணவுப் பொருள் நுகர்வின் மீது மிகுந்த பாதிப்பை உருவாக்கியது. வேலையின்மையை சரிசெய்ய எந்த குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையே ஆய்வறிக்கை அம்பலப்படுத்தியது. ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகிய நான்கு பிரிவினருக்கான நிதிநிலை அறிக்கை என்று ஏற்கெனவே புளித்துப் போன வசனத்தையே இந்த முறையும் பேசி இருக்கிறது. ஆனால், இவர்களுடைய நிலைமையை முன்னேற்ற எந்த புதிய அறிவிப்புகளும் இல்லை.

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கும் மற்றொரு வழியாகும். மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை பற்றி பொருளாதார ஆய்வறிக்கையும் விமர்சனங்களை தெரிவிக்கிறது. அதற்கேற்றபோல் நிதிநிலை அறிக்கையிலும் இதுகுறித்த எந்த அறிவிப்பும் இல்லை.வேலை வாய்ப்புகளை அதிகமாக தரும் சிறு, குறு, நடுத்தர தொழில்களின் நீண்ட கால கோரிக்கைகள் பல இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.

பெரு நிறுவனங்களுக்கு தரப்படுவது போன்ற ஊக்குவிப்புத் தொகை, வாராக் கடன் செலுத்துவதற்கான கால வரம்பு 150 நாட்கள் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. அரசின் கடந்த கால வாக்குறுதிகள் நடைமுறையில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு சென்று சேரவில்லை. அதற்கான அரசின் மானியம் அரசு வங்கிகளுக்கு தரப்படவில்லை என்பதே நமது அனுபவம். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்கிற அரசின் முழக்கம் தொடர்ந்து ஏமாற்று வார்த்தைகளாகவே தொடர்கின்றது. விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்பது அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அரசு கூறினாலும், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைத்த சி 2 + 50 சதவிகிதம் என்ற அளவு இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது.

அரசின் வருமானத் திரட்டல் கொள்கையிலும் கார்ப்பரேட் ஆதரவு அப்பட்டமாக வெளிப்படுகிறது. உலகம் முழுவதும் செல்வ வரி, வாரிசு உரிமை வரி, கார்ப்பரேட் வரி உயர்வு பற்றிய விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் கார்ப்பரேட் வரிகள் சற்றும் உயர்த்தப்படவில்லை என்பது மட்டுமின்றி, அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 40 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக குறைக்கப்பட்டு இருப்பது ஆட்சியாளர்களின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கையை அம்பலப்படுத்துகிறது.

கடந்தாண்டு நிதிநிலை அறிக்கையோடு ஒப்பிடும்போது சுகாதாரம், கல்வி, விவசாயம் ஆகிய துறைகளுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை. இந்த துறைகளின் வளர்ச்சி மற்றும் தேவை ஆகியவற்றிலிருந்து பார்க்கும்போது நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவே. இவ்வளவுக்கு பின்னரும் கூட, வருகிற ஆண்டு (2024-25) வளர்ச்சி விகிதம் 8.2 சதவிகிதமாக உயரும் என்று அவர்கள் முன்மொழிவது வேடிக்கையாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக, இந்த பட்ஜெட் ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிக்கும். மக்கள் வாழ்க்கை முன்னேற்றத்துக்கான எந்த உருப்படியான முன்னேற்றத்தையும் கொண்டு வராது. எனவே, மத்திய அரசின் இந்த பட்ஜெட்டை கண்டித்து அனைத்து தரப்பு மக்களும் தங்களது வலுவான கண்டனக் குரலை எழுப்பிட வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x