Published : 23 Jul 2024 04:50 PM
Last Updated : 23 Jul 2024 04:50 PM

“59% மக்களுக்கு வேலை தரும் விவசாயத்துக்கு பட்ஜெட்டில் வெறும் 2.78% ஒதுக்கீடு” - தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்

சென்னை: “இந்தியாவின் இந்த ஆண்டுக்கான ஒட்டுமொத்த நிதிநிலை அறிக்கை ரூ.47.66 லட்சம் கோடிகளாகும். அதில் வேளாண்மைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது 1.5 லட்சம் கோடி மட்டுமே. அதாவது மொத்த ஒதுக்கீட்டில் 2.78% மட்டுமே ஆகும். தொடர்ச்சியாக மத்தியில் ஆளும் அரசியல் கட்சிகள் வேளாண் துறைக்கும், விவசாயிகளுக்கும் ஒதுக்கும் தொகை என்பது மிக மிக குறைவாக இருந்து வருகிறது. இந்த நிதிநிலை அறிக்கையிலும் அது தொடர்ந்துள்ளது,” என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனரான வழக்கறிஞர் ஈசன் முருகசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் மோடி தலைமையில் 11-வது முறையாக தாக்கல் செய்யப்பட்டுள்ள 2024-25 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை என்பது, விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக ஏமாற்றம் அளித்து வருவதன் ஒரு பகுதியே ஆகும். இந்தியாவில் 70% மக்கள் வேளாண்மையை சார்ந்துள்ளனர், 59% மக்களுக்கு வேளாண்மை துறை வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. இந்தியாவின் இந்த ஆண்டுக்கான ஒட்டுமொத்த நிதிநிலை அறிக்கை 47.66 லட்சம் கோடிகளாகும். அதில் வேளாண்மைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது 1.5 லட்சம் கோடி மட்டுமே. அதாவது மொத்த ஒதுக்கீட்டில் 2.78% மட்டுமே ஆகும். தொடர்ச்சியாக மத்தியில் ஆளும் அரசியல் கட்சிகள் வேளாண் துறைக்கும், விவசாயிகளுக்கும் ஒதுக்கும் தொகை என்பது மிக மிக குறைவாக இருந்து வருகிறது. இந்த நிதிநிலை அறிக்கையிலும் அது தொடர்ந்து உள்ளது.

59% மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் துறைக்கு குறைந்தபட்சம் 20% நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கி இருக்க வேண்டும். ஆனால் வெறும் 2.78 சதவீதம் மட்டுமே ஒதுக்கி உள்ளது தொடர்ச்சியாக மத்திய அரசு வேளாண்மையை புறக்கணித்து வருகிறது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி அளிக்கப்படும் என்பது வரவேற்கக் கூடிய அறிவிப்பாக இருந்தாலும், நடைமுறைப்படுத்தும் போது இயற்கை விவசாயிகளை கலந்து ஆலோசனை செய்து நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையென்றால் தற்போது மத்திய அரசால் 10,000 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கும் திட்டம் திட்டம் தோல்வியடைந்துள்ளதைப் போன்று இந்த திட்டமும் அமைய வாய்ப்புள்ளது.

கடுகு, நிலக்கடலை, சூரியகாந்தி, ஆகியவற்றின் ஆகிய எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை கூடுதல் ஆக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது, நம்ப தகுந்ததாக இல்லை. வரியில்லாமல் வெளிநாட்டு பாமாயிலை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கொடுத்து விட்டு, இந்திய எண்ணெய் வித்துக்களை புறக்கணிப்பது தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. கடுகு, நிலக்கடலை, சூரியகாந்தி, தேங்காய் உள்ளிட்ட இந்திய எண்ணெய் வித்துக்களுக்கு தேங்காயைத் தவிர கொள்முதல் திட்டம் கிடையாது. கட்டுபடியான விலை இல்லாததால் விவசாயிகள் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இந்திய எண்ணெய் வித்துக்கள் அனைத்தையும் மத்திய அரசு கொள்முதல் செய்த பின்பு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தால் மட்டுமே, இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க முடியும். அதுவரை அறிவிக்கப்படும் அறிவிப்புகள் விவசாயிகளுக்கு பயன் விவசாயிகளுக்கு அளிக்காது.

கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியான, விவசாயிகளின் அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும் உற்பத்தி செலவுடன் 50% சேர்த்து விலை நிர்ணயம் செய்யப்படும், கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட அறிவிப்பு 11 ஆண்டுகளை கடந்தும் அமல்படுத்தப்படாமல் உள்ளது. இதை அமல்படுத்த கோரி விவசாயிகள் போராடியதாலேயே தற்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தல் பாரதிய ஜனதா கட்சிக்கு வட மாநிலங்களில் பின்னடைவு ஏற்பட்டது உண்மை. அதன் பின்பும் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கை எடுக்காமல், அது குறித்து அறிவிப்பு ஏதும் இல்லாத இந்த நிதி நிலை அறிக்கை மிகப்பெரிய ஏமாற்றமே ஆகும்.

எனவே, மத்திய அரசு வரும் காலங்களில் விவசாயிகள் மற்றும் வேளாண் துறைக்கு ஒட்டுமொத்த நிதிநிலை அறிக்கையில் குறைந்தபட்சம் 20% ஒதுக்க வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை பாதுகாப்பதற்கு சட்டம் இயற்றி, உற்பத்தி செலவுடன் 50% சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து, கொள்முதல் செய்ய வேண்டும். ஒருமுறை அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இந்தியா முழுவதும் உழவர்களுக்கு வேளாண் மின்சாரத்தை 100% மானியத்தில் வழங்குவது, விவசாயிகள் பாதிக்கப்படும்போது பயன்பெறும் வகையில் காப்பீட்டு திட்டத்தை மாற்றி அமைப்பது உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதுபோன்ற அம்சங்கள் எதுவுமே இடம்பெறாத இந்த நிதி நிலை அறிக்கை தொடர்ச்சியான ஏமாற்றத்தின் ஒரு பகுதி என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x