Published : 23 Jul 2024 04:41 PM
Last Updated : 23 Jul 2024 04:41 PM

10 நிமிட மழைக்கே தேங்கும் தண்ணீர்: கால்வாய் கோரும் மாடம்பாக்கம் மக்கள்

மாடம்பாக்கம் பகுதியில் தேங்கியுள்ள மழை நீர்.

தாம்பரம் அருகே மாடம்பாக்கம் ஆதித்யா நகரில் 10 நிமிட மழைக்கே தண்ணீர் தேங்குகிறது. இதனால் மழைக் காலத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். தாம்பரம் மாநகராட்சி மாடம்பாக்கம், நூத்தஞ்சேரி, 70-வது வார்டு ஆதித்யா நகரில், 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்த பகுதியில், 10 நிமிடங்கள் மழை பெய்தால் ஒரு அடி உயரம் வரை மழைநீர் தேங்கி நிற்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, 3-வது தெருவில் தண்ணீர் வெளியேற வழியில்லாததால் மழைநீர் அப்படியே தேங்கி நிற்கும். இதனால் கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், அதிமுக மாநகராட்சி உறுப்பினர்கள் உள்ள வார்டுகள் புறக்கணிக்கப்படுவதாக அக்கட்சி சார்பில் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. எனவே, எந்த பாரபட்சமும் பார்க்காமல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக மழைநீர் கால்வாய் இல்லாத இந்த பகுதியில் மழைநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பேரூராட்சியாக இருந்தகாலம் முதலே கால்வாய் கட்டித்தர வலியுறுத்தி வந்த நிலையில், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டும் பல முறை புகார் கூறியும், இது நாள் வரை இப்படியேதான் உள்ளதாக ௮ப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

ரமேஷ்

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ரமேஷ் கூறியது: நான் உள்ளிட்ட எங்கள் பகுதி மக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் முறையாக செலுத்தி வருகிறோம். ஆனால், எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. சிறிய மழை பெய்தாலே எங்கள் பகுதியில் ஒரு அடி தண்ணீர் தேங்கி விடுகிறது. தண்ணீர் வெளியேறுவதற்கு போதிய கட்டமைப்பு இல்லை. பெரிய மழை பெய்தால் குளம்போல் தண்ணீர் தேங்கி விடுகிறது. மேலும், இங்கு சாலை அமைக்கப்பட்டதில் ஒரு பகுதி உயர்வாகவும், ஒரு பகுதி தாழ்வாகவும் அமைத்திருக்கின்றனர். இதனால் மழைநீர் வெளியேற முடியாமல் ஒரே பகுதியில் தேங்கி நிற்கிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தோம். ஆனால் தீர்வு காணப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாலசுந்தரம்

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் கூறியது: சாலையில் மழை நீர் தேங்குவதால் சிறியவர் முதல் பெரியவர் வரைமிகவும் அவதி அடைகிறோம். தண்ணீரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் என்கிறார்கள். எங்கள் பகுதியில் மழைநீர் வெளியேற வழி இல்லாததால் சாலையிலே தேங்கி நிற்கிறது. இதனால் டெங்கு கொசு உற்பத்திக்கான வாய்ப்பு அதிகம் இங்கு உள்ளது.

சிறிய மழைக்கே தெருவில் தேங்கும் மழைநீர் பெரிய அளவில் பெய்தால் குளம்போல தேங்கி வீட்டுக்குள் புகுந்து விடுகிறது. மற்ற பகுதிகளில் தண்ணீர் வடிந்த பிறகு தான் எங்கள் பகுதியில் தண்ணீர் வடியும். எனவே மழைநீர் வெளியேறுவதற்கு போதிய கால்வாய் வசதிகளை அமைக்க வேண்டும். எங்கள் பகுதிக்கு கால்வாய் அமைத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்றார்.

அதிமுக வார்டு கவுன்சிலர் தேவேந்திரனிடம் கேட்டபோது: மழைநீர் வெளியேறி செல்ல வழி இல்லாததால் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் மழைநீர் வடிகால் அமைக்கக் கோரி கடந்த ஓராண்டுக்கு முன்பு மாநகராட்சியிடம் கோரிக்கை மனு அளித்தேன். ஆனால் இதுவரை செய்யவில்லை. எதிர்க்கட்சி என்பதால் எங்களை வேண்டுமென்றே புறக்கணிக்கின்றனர். எங்கள் வார்டுகள் புறக்கணிக்கப்படுகிறது என ஏற்கெனவே ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறோம்.

அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தார். விரைவில் அதிமுக சார்பில் மாநகராட்சியை கண்டித்து போராட்டம் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, மழை பெய்தால் சாலையில் தண்ணீர் இருப்பது வாடிக்கை. மழை நின்றவுடன் தண்ணீர் வடிந்து விடுகிறது. மாடம்பாக்கத்தில், தேவை இருப்பின் கண்டிப்பாக கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x