Last Updated : 23 Jul, 2024 04:22 PM

1  

Published : 23 Jul 2024 04:22 PM
Last Updated : 23 Jul 2024 04:22 PM

காஞ்சியில் புதர் மண்டிய பொன்னேரி: பாலப் பணி முடிவடைந்தும் பராமரிப்பில்லை!

சென்னையில் இருந்து செல்லும்போது காஞ்சிபுரத்தின் நுழைவு வாயிலில் புதர் மண்டிக் கிடக்கும் பொன்னேரி.

காஞ்சிபுரத்தின் நுழைவு வாயிலில் உள்ள பொன்னேரி, வளர்ந்து வரும் காஞ்சிபுரம் பகுதிக்கு முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்குகிறது. இதனால் இந்த ஏரியை தூர்வாரி பாதுகாப்பதுடன், அங்கு படகு குழாம் அமைத்து சுற்றுலாவை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

காஞ்சிபுரத்தின் பழமை வாய்ந்த ஏரிகளில் ஒன்று நகரின் நுழைவு வாயிலில் உள்ள பொன்னேரி. இந்த ஏரியைச்சுற்றியுள்ள பகுதி காஞ்சிபுரம் மாநகராட்சி விரிவடையும் பகுதியாக உள்ளது. இந்த ஏரி மூலம் விவசாயத்துக்கு பாசனம் எதுவும் நடைபெறவில்லை. இருப்பினும் இந்த ஏரி நீர், வளர்ந்து வரும் காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டம் உயர முக்கிய நீராதாரமாக உள்ளது.

ஆனால் இந்த ஏரி சரிவரபராமரிக்கப்படாததால் தற்போது ஏரியில் அதிக அளவு கருவேல மரங்கள் வளர்ந்து. அவற்றின் கிளைகள் முறிந்து கீழே கிடக்கின்றன. மேலும் ஏரி முழுவதும் புதர் மண்டிய நிலையில் உள்ளது. ஏரியைச் சுற்றி பல்வேறு இடங்களில் குப்பைகள், மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் ஏரி பாழ்பட்டு வருகிறது. காஞ்சியில் இருந்து சென்னை செல்வதற்கு இந்த ஏரியின் வழியாக ரயில்வே மேம்பாலம் செல்கிறது.

ரயில்வே மேம்பால பணிகள் தொடங்கியபோது, மேம்பாலம் சென்னையில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலை வழியாக அமைக்கவே திட்டமிடப்பட்டது. ஆனால் அவ்வாறு பாலம் அமைக்கும்போது அந்தப் பகுதியில் சில இடங்களில் தொல்லியல் துறைக்கு சொந்தமான கோயில்கள் இருந்ததால் அனுமதி பெற்று கோயில்களை அப்புறப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் கோயிலுக்கு பாதிப்பில்லாமல் மேம்பாலத்துக்கான தூண்களை ஏரியில் அமைத்து சாலையுடன் இணைக்க திட்டமிட்டனர். பாலத்தின் தூண்களை ஏரியில் அமைப்பதால் ஏரியின் நீர் பிடிப்பு அளவு குறையும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்தனர். அப்போது நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள், ஏரி நீரில் கொள்ளளவுக்கு ஏற்படும் பாதிப்பை சரி செய்யும் வகையில் ஏரியை தூர்வாரி, கரைகள் பலப்படுத்தப்படும் என்று அப்போது தெரிவித்தனர்.

ஆனால் மேம்பாலப் பணிகள் முடிவடைந்து புழக்கத்துக்கு வந்த நிலையிலும் ஏரியின் கரைகள் பலப்படுத்தும் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என பொதுமக்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர். ஓய்வுபெற்ற தலைமைச் செயலர் இறையன்பு கடந்த 1998-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது பொன்னேரி பகுதியை ஆய்வு செய்தார். அப்போது அவர் இந்த ஏரியை சீரமைத்து படகு விடவும், இதன் மூலம் இந்த ஏரியை சுற்றுலாத்தலமாக மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆனாலும் அடுத்தடுத்து வந்தவர்கள் இந்த ஏரியை சீரமைப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்காததால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. சென்னையில் இருந்து காஞ்சிபுரம் நகருக்குள் நுழையும்போது நுழைவுவாயில் பகுதியில் இந்த ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை தூர்வாரி படகு குழாம் அமைப்பதன் மூலம் சுற்றுலாவை மேம்படுத்த முடியும் என்றும் சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த ஏரியின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினால்தான் ஏரிக்கு நீர் வரத்து இருக்கும் என்றும், ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த நீர்வளத்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

கோ.ரா.ரவி

இதுகுறித்து தமிழ் மக்கள் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் கோ.ரா.ரவி கூறியதாவது: நீர்நிலைகளில் கட்டுமானப் பணிகள் எதுவும் செய்யக் கூடாது. நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என நீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியுள்ளது. ஆனால் இந்த ஏரியின் மீது பாலத்தை கட்டினர். இதனை எதிர்த்து வழக்கு போட்டோம். ஆனாலும் பாலம் கட்டும் பணி நடந்து முடிந்துவிட்டது. இனியாவது ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட நீர் வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பொன்னேரியை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தால் அதில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன. பாலம் அமைத்த போதே நெடுஞ்சாலைத் துறையால் பாலத்தின் தூண்களால் குறையும் நீருக்கு தகுந்த அளவு தூர்வாரும் பணி மட்டும் நடைபெற்றது. இந்த ஏரியை முழுமையாக தூர்வாரி கரைகளை பலப்படுத்தி சீரமைப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x