Published : 23 Jul 2024 04:29 PM
Last Updated : 23 Jul 2024 04:29 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷன் கடை திறப்பு அறிவிப்பு மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ''புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை திறந்து அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில அரசை வலியுறுத்தியது. தொடர்ந்து போராட்டங்களையும் நடத்தியது. இன்றைக்கு ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்றும், அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் ஆகியவை மானிய விலையில் வழங்கப்படும் என்று மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பு மார்க்சிஸ்ட் கட்சியின் 18 மாதங்கள் இடைவெளி இல்லாத நடபெற்ற தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி.
மத்திய அரசு, அரசு ஊழியர்கள், அதிகாரிகள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இணையலாம் என்று அறிவித்துள்ளனர். இந்திய அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள், தேசிய கொடியை ஏற்றுக்கொள்ளாதவர்கள், இந்து ராஷ்ட்ரா, கார்ப்பரேட் நலன்களை வலியுறுத்துபவர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கம். மக்களின் பிரிவினை வாதத்தை தூண்டக்கூடியவர்களாக செயல்பட்டு வந்துள்ளனர். அதனால்தான் மகாத்மா காந்தி இறந்த பின்பு ஆர்எஸ்எஸ் இயக்கம் தடை செய்யப்பட்டது.
பின்னர் அரசில், ஆட்சியில் ஈடுபட மாட்டோம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக் கொள்கிறோம் என்று ஆர்எஸ்எஸ் இயக்கம் அன்றைக்கு உள்துறை அமைச்சர் பட்டேலுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த பின்னரே ஆர்.எஸ்.எஸ் இயக்கம் செயல்பட அனுமதிக்கப்பட்டது. அரசு ஊழியர்கள், அதிகாரிகள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேரலாம் என்று மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளார். இதன்மூலம் அரசு நிர்வாகம் ஆர்.எஸ்.எஸ் பிடியில் செல்வதற்கான ஆபத்து உள்ளது. எனவே, அரசு ஊழியர்கள், அதிகாரிகள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேரலாம் என்பதை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்.
இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் உள்ளிட்ட மூன்று சட்டங்களை நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமல் ஜூலை முதல் தேதியிலிருந்து அமல்படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத்தால் பல்வேறு விளைவுகள் ஏற்படக்கூடிய நிலை உள்ளது. இச்சட்டங்களை மீண்டும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்திய பின்னரே அமல்படுத்த வேண்டும். அதுவரை இந்த சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும். அதேப்போல் தொழிற் சட்டங்கள் 29 சட்டங்களை வெறும் 4 சட்ட தொகுப்புகளாக மாற்றப்பட்டுள்ளதை நிறுத்தி வைக்க வேண்டும்'' என்றார்.
மேலும், “தேசிய அளவில் மக்களின் உணவுப் பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. புதுச்சேரி அரசும் இதனை தொடங்கியுள்ளது. இன்றைக்கு விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச ஊதியமாக சிஐடியு தொழிற்சங்கம் வைத்துள்ள கோரிக்கையின் படி குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 26,000-ஐ தொழிலாளர்களுக்கு வழங்க மாநில அரசுகள் முன் வர வேண்டும். புதுச்சேரி டெல்டா மாவட்டமான காரைக்காலில், அண்டை மாநிலமான நாகை மாவட்டத்தில் நெற்பயிர்கள் கொள்முதல் நிலையங்கள் தொடங்கி உள்ளதைப் போல் காரைக்கால் பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து குருவை சாகுபடி சம்பா நெற்பயிர்களை கொள்முதல் செய்ய வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய ஜி. ராமகிருஷ்ணன், “இந்திய கூட்டாட்சி முறைப்படி ஒட்டு மொத்த வரி வருவாயில் மாநிலங்களுக்கு சேர வேண்டிய 50 விழுக்காடு நிதி முறையாக மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும். புதுச்சேரி மாநில நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று அவர் தெரிவித்தார். பேட்டியின்போது மாநில செயலாளர் ராஜாங்கம், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT