Published : 23 Jul 2024 03:20 PM
Last Updated : 23 Jul 2024 03:20 PM
சென்னை: “மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாத, வேலை வாய்ப்பை பெருக்காத, சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வை சமன் செய்யாத ஒரு பிற்போக்குத்தனமானது,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை சாடியுள்ளார்.
இதுதொ டர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத நிலையில் மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பிரதமர் மோடி தலைமையில் அமைந்து முதல் பட்ஜெட்டை மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்திருக்கிறார். பட்ஜெட் உரையில் வருமான மதிப்பீடு ரூபாய் 32 லட்சம் கோடியாகவும், செலவினங்கள் ரூபாய் 48 லட்சம் கோடியாகவும் 2025 ஆம் நிதியாண்டில் இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. இது ஒரு ஆரோக்கியமான நிதி மேலாண்மையை உறுதி செய்வதாக இல்லை. காரணம், ஏற்கனவே பாஜக ஆட்சியில் ரூபாய் 155 லட்சம் கோடி கடன் இருப்பதால் அதற்கு வட்டியாக பெருந்தொகையை செலவிட வேண்டிய நிலையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இருக்கிறது.
கடந்த காலங்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் வேலையில்லா திண்டாட்டம், வருமானத்தில் ஏற்றத்தாழ்வுகள், விவசாயிகளின் பிரச்சினைகள் என பல்வேறு பிரச்சினைகளுக்கு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிதிநிலை அறிக்கையை பார்க்கிற போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் நிதிநிலை அறிக்கையா அல்லது ஆந்திரா, பிஹார் மாநில நிதிநிலை அறிக்கையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இன்றைக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசை காப்பாற்றுவது நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும் தான். அதனால் அவர்கள் விடுத்த கோரிக்கைகளின் அடிப்படையில் பிஹார் மாநிலத்துக்கு ரூபாய் 26 ஆயிரம் கோடி நிதியும், ஆந்திர மாநிலத்துக்கு ரூபாய் 15 ஆயிரம் கோடி சிறப்பு நிதியாக நிர்மலா சீதாராமன் வாரி வழங்கியிருக்கிறார். இந்த அறிவிப்பை படிக்கும் போது மக்களவை எதிர்கட்சி உறுப்பினர்களிடையே கடும் எதிர்ப்புக் குரல் எழுந்தது.
தமிழக முதல்வர் விடுத்த கோரிக்கையின்படி வெள்ள நிவாரண நிதியோ, மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியோ, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடோ முற்றிலும் வழங்கப்படாமல் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. நிர்மலா சீதாராமன் வாசித்த நிதிநிலை அறிக்கையில் வழக்கமாக வாசிக்கப்படும் தமிழ்நாடு என்ற வார்த்தையும் இல்லை, பாரதியார் கவிதைகளோ, திருக்குறளோ இல்லை. கடந்த மக்களவை தேர்தலின் போது தமிழகத்துக்கு 10 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட நரேந்திர மோடி ஆட்சி சமர்ப்பித்த தேர்தல் அறிக்கையில் தமிழ்நாடு என்ற ஒரு வார்த்தை கூட இல்லாதது அவரது கபட நாடகத்தை அம்பலமாக்கியுள்ளது.
சுதந்திர இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். ஆனால், 2011-ல் நடத்தப்பட்டதற்கு பிறகு 2021-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பை பாஜக அரசு நடத்தியிருக்க வேண்டும். அது நடத்தாத காரணத்தால் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி ஏறத்தாழ 10 முதல் 12 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்கள் மறுக்கப்பட்டு வருகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாத மத்திய அரசு சமூக, பொருளாதார, சாதி வாரி கணக்கெடுப்பையும் நடத்துவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அந்த வகையில் மக்களின் வாழ்வாதார நிலை குறித்தோ, சமூக நீதி குறித்தோ கணக்கெடுப்பு நடத்துவது குறித்தோ எந்த கவலையும் இல்லாமல் அலட்சியப் போக்குடன் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்பு காங்கிரசின் தேர்தல் அறிக்கையை படித்திருப்பதற்கான வாய்ப்புகள் அவரது அறிக்கையில் தென்படுகின்றன. அதன்படி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சிக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று உறுதி கூறப்பட்டிருந்தது. அதை நிறைவேற்றுகிற வகையில் நிர்மலா சீதாராமன் 20 லட்சம் இளைஞர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ஊக்கத் தொகையுடன் பயிற்சி வழங்கப்படும் என்று கூறி அதற்கான நிதியை ஒதுக்கியிருக்கிறார்.
சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கோ எந்தவிதமான சலுகைகளும் இல்லை. வேலை வாய்ப்பை பெருக்குகிற வகையில் பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை. தற்போதைய நிலையில் ஏற்கனவே பணமதிப்பு நீக்கம், தவறான ஜிஎஸ்டி, கோவிட் பாதிப்பு காரணமாக ரூபாய் 11.3 லட்சம் கோடி இழப்பும், 1.6 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் வேலையிழப்பும் நடைபெற்ற பாதிப்பிலிருந்து மீட்பதற்கு நிதிநிலை அறிக்கையில் எந்த தீர்வும் இல்லை.
கடந்த 10 ஆண்டு மோடி ஆட்சியில் வருமானத்தில் ஏற்றத்தாழ்வு அதிகரித்து ஒரு குறிப்பிட்ட சிலர் சொத்து குவிக்கிற அவலநிலை நீடித்து வந்தது. அதன்படி 10 சதவிகிதத்தினர் 65 சதவிகித சொத்துகளையும், உயர்நிலையில் இருக்கிற 1 சதவிகிதத்தினர் 40 சதவிகித சொத்துகளையும் குவித்து வைத்துள்ளனர். இத்தகைய சொத்து குவித்து வைத்திருப்பவர்கள் மீது கடுமையான வரி விதித்து வருமானத்தை பெருக்கி, ஏழை, எளியவர்களுக்கு பயன் தருகிற வகையில் திட்டங்களை தீட்ட வேண்டுமென்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அத்தகைய வரி விதிப்பை அறிவித்து பொருளாதார ஏற்றத்தாழ்வை குறைக்கிற எந்த நடவடிக்கையையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுக்க தயாராக இல்லை.
எனவே, மத்திய அரசு என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் தான் நிதி ஒதுக்கீடுகள் அமைய வேண்டும். ஆனால், தங்களது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள பாரபட்சமாக நிதி ஒதுக்குவது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கிற செயலாகும். நீண்டகாலமாக அனைத்து நிலைகளிலும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்று எழுப்பப்பட்ட கண்டன குரலுக்கு எந்த வகையிலும் செவி மடுக்காத ஒரு நிதிநிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்திருக்கிறார். இந்த நிதிநிலை அறிக்கை வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாத, வேலை வாய்ப்பை பெருக்காத, சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வை சமன் செய்யாத ஒரு பிற்போக்குத்தனமான நிதிநிலை அறிக்கை என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT