Last Updated : 23 Jul, 2024 11:41 AM

8  

Published : 23 Jul 2024 11:41 AM
Last Updated : 23 Jul 2024 11:41 AM

“தமிழில் பெயர் பலகை வைப்பீர்!” - வணிகர்கள் நலவாரிய கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: “வணிகர்கள் கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க தாமாகவே முன்வரவேண்டும்” என்று வணிகர்கள் நலவாரிய முதல் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

தமிழக அரசின் சார்பில் நாட்டிலேயே முதல் முறையாக, வணிகர்கள் நலனுக்காக வணிகர்கள் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த வாரியத்தின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாரியத்தின் துணைத் தலைவரான அமைச்சர் பி.மூர்த்தி, வணிக வரித்துறை செயலர், வணிக வரித்துறை ஆணையர், நிதித்துறை செயலர், தொழிலாளர் நலத்துறை செயலர் மற்றும் பல்வேறு வணிகர் சங்கங்களைச் சேர்ந்த வணிகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: "இந்த வாரியத்தை மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உருவாக்கினார். தற்போது வரை இந்த வாரியத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 88,210 ஆக உயர்ந்துள்ளது. அடுத்த வாரிய கூட்டத்துக்குள் இந்த வாரியத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று வாரிய உறுப்பினர்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன். திமுக அரசு அமைந்த பின் வாரியம் மூலம் நலத்திட்ட ங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. குடும்ப நல நிதியும் உயர்த்தப்பட்டு 390 பேர் குடும்பங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. அரசு பொறுப்பேற்றது முதல் 8883 வணிகர்கள் பல்வேறு நிதியுதவிகள் பெற்றுள்ளனர். வருங்காலத்தில் பல்வேறு முன்னெடுப்புகளை செய்ய தயாராக உள்ளோம். சமீபத்தில் உள்ளாட்சி அமைப்புகளால் கடைகளுக்கு ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும் உரிமங்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சிகளில் 9 ஆண்டுகள் இருந்ததை 12 ஆண்டுகள் என விதிகள் திருத்தப்பட்டுள்ளது. வணிகர்கள் நீங்களே முன்வந்து தமிழில் பெயர் பலகைகளை மாற்ற முன்வரவேண்டும். மிகப்பெரிய தொழிற்சாலைகள் மட்டுமின்றி, சிறு கடைகளும், வியாபாரிகளும் தங்கள் வணிகத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்பதில் அரசு அக்கறை கொண்டுள்ளது. சிறு வணிகர்களும், நிறுவனங்களும் நிதி வளர்ச்சிக்கு மட்டுமல்ல; மனித வளர்ச்சிக்கும் அடிப்படையானவை.

உங்கள் வணிகத்துக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதுதான் அரசின் கொள்கை. உங்கள் கோரிக்கைகளை எப்போது வேண்டுமானாலும் எங்களை சந்தித்து சொல்லலாம். நமக்கிடையில் இடைத்தரகர்கள் இல்லை. இருக்கவும் கூடாது. இதை மனதில் வைத்து வர்த்தகமாக இல்லாமல் சேவை மனப்பான்மையுடன் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x