Published : 23 Jul 2024 05:06 AM
Last Updated : 23 Jul 2024 05:06 AM
சென்னை: உலக அளவில் மருத்துவ உதவி உபகரணங்கள் தேவையுள்ளவர்கள் ஏறத்தாழ 200 கோடி பேர் உள்ளதால், மருத்துவ சாதனங்கள் உற்பத்தியில் இந்தியாவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஆலோசகரும், உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானியுமான சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயோ மெடிக்கல் இன்ஜினீயரிங் என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. இத்துறையின் தொடக்கவிழா அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தர் அரங்கில் நேற்று நடைபெற்றது.
துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானியும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஆலோசகருமான சவுமியா சுவாமிநாதன் புதிய துறையைத் தொடங்கிவைத்தார்.
இவ்விழாவில், பதிவாளர் ஜெ.பிரகாஷ், பயோ மெடிக்கல் இன்ஜினீயரிங் துறை தலைவர் சசிகலா, எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் துறை தலைவர் எம்.ஏ.பாக்கியவேணி, பிஇ, எம்இ பயோ மெடிக்கல் இன்ஜினீயரிங் மாணவிகள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் சவுமியா சுவாமிநாதன் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிதாக பயோ மெடிக்கல் இன்ஜினீயரிங் துறை தொடங்கப்பட்டிருப்பது நல்ல முயற்சி. நம் நாட்டில் பல மருத்துவ தொழில்நுட்பங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துதான் பயன்படுத்துகிறோம். மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள மருத்துவ உபகரணங்கள் 99 சதவீதம் இறக்குமதி செய்யப்பட்டதாகவே இருக்கும். அவற்றின் விலையும் அதிகம்.
எனவே, அனைத்து நோயாளிகளும் பயன்பெறும் வகையில் குறைந்த செலவில் உள்ளூர் தொழில்நுட்பத்தில் தயாரான மருத்துவ உபகரணங்கள் இருந்தால் சிறப்பாக இருக்கும். வெளிநாடுகளில் உள்ள தட்பவெப்பம், காலநிலை வேறு, நமது தட்பவெப்பம், காலநிலை வேறு. மேற்கத்திய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் நம்நாட்டுச் சூழலில் சரிவர இயங்குவதில்லை. எனவே உள்ளூர் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப மருத்துவ உபகரணங்களை நாம் வடிவமைத்தால் அது நன்றாக இருக்கும்.
உலக அளவில் 200 கோடி பேருக்கு சக்கர நாற்காலி, ஊன்றுகோல் உள்ளிட்ட மருத்துவ உதவி சாதனங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் தேவையுடன் ஒப்பிடும்போது உற்பத்தி என்பது 10 சதவீதம் என்ற அளவில்தான் உள்ளது. எனவே, இத்தகைய மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முன்னிலை வகிக்க வாய்ப்புகள் உள்ளன.
அதேபோல், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்கள் அதிகரித்து வரும் நிலையில் அவற்றை எதிர்கொள்வதற்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்களையும் தயாரிக்கலாம். இப்படிப்பட்ட சூழலில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயோ மெடிக்கல் இன்ஜினீயரிங் துறை தொடங்கப்பட்டிருப்பது உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட நல்ல முயற்சி.
இவ்வாறு அவர் கூறினார்.
பிஇ பயோ மெடிக்கல் இன்ஜினீயரிங் படிப்பில் 60 இடங்களும், எம்இ படிப்பில் 36 இடங்களும் இருப்பதாக பயோ மெடிக்கல் இன்ஜினீயரிங் துறையின் தலைவர் பேராசிரியை சசிகலா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT