Published : 23 Jul 2024 05:46 AM
Last Updated : 23 Jul 2024 05:46 AM
சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ. 924.16 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 5,643 குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின்கீழ் சென்னையில் கார்கில் நகர் திட்டப் பகுதியில் தூண் மற்றும் 15 தளங்களுடன் ரூ.190.88 கோடியில் 1,200 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், திருச்சினாங்குப்பம் பகுதி – 2 திட்டப் பகுதியில் தரை மற்றும் 4 தளங்களுடன், ரூ. 35.63 கோடியில் 360 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம், மணலி புதுநகர் பகுதி – 2 திட்டப் பகுதியில் தூண் மற்றும் 14 தளங்களுடன் ரூ. 226.64 கோடியில் 1,792 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், தேனி மாவட்டம், தம்மணம்பட்டி திட்டப்பகுதியில் ரூ.29.52 கோடியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 264 குடியிருப்புகள் மற்றும் 36 தரைதள குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
அதேபோல், புதுக்கோட்டை, பாலன்நகர் பகுதி – 2 திட்டப் பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.23.57 கோடியில் 256 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கறம்பக்குடி திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.10.50 கோடியில் 96 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், நீலகிரி மாவட்டம், அவலாஞ்சி திட்டப்பகுதியில் தரை மற்றும் ஒரு தளத்துடன் ரூ.24.58 கோடியில் 180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
இவ்வாறாக வாரியத்தின் சார்பில், ரூ.541.32 கோடியில் கட்டப்பட்ட4,184 குடியிருப்புகளை முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார். இக்குடியிருப்புகள் தலா 400 சதுர அடி பரப்பளவுடன், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. சாலை, குடிநீர் என கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. “நம் குடியிருப்பு, நம் பொறுப்பு” திட்டத்தின்கீழ் குடியிருப்போர் நலச்சங்கங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
வீட்டுவசதி வாரியம்: அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்பு திட்டத்தின் கீழ், சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் ரூ. 344.47 கோடியில் கட்டப்பட்டுள்ள 1,387 அடுக்குமாடி குடியிருப்புகள், அரியலூர் மாவட்டம், அரியலூரில் ரூ.19.19 கோடியில் கட்டப்பட்டுள்ள 72 அடுக்குமாடி குடியிருப்புகள், சென்னை மாவட்டம், அசோகா காலனியில் ரூ.19.18 கோடியில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம் என ரூ.382.84 கோடியில் கட்டப்பட்டுள்ள 1,459 குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகக் கட்டிடம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சு.முத்துசாமி, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், எஸ்.எஸ். சிவசங்கர், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, துறை செயலர் காகர்லா உஷா, வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண் இயக்குநர் சு.பிரபாகர், வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநர் கீ.சு.சமீரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment