Published : 31 May 2018 03:16 PM
Last Updated : 31 May 2018 03:16 PM

முடிந்தால் என் மீது சொல்லும் குற்றச்சாட்டை நிரூபிக்கட்டும்; மான நஷ்ட வழக்கு தொடருவேன்; தமிழக முதல்வருக்கு கீதா ஜீவன் சவால்: பிரத்யேக பேட்டி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கும், அந்த ஆலைக்கு எதிராக மே 22-ம் தேதி நடைபெற்ற பேரணி வன்முறையாக மாறுவதற்கும் திமுகவும், அக்கட்சியின் எம்எல்ஏ கீதா ஜீவனும் தான் காரணம் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில் பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார்.

ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு கீதா ஜீவன் பெயரில் 600 லாரிகள் ஓடுகின்றன என்றும் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியிருக்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸும் இதே புகாரை முன் வைக்கிறார். ஸ்டெர்லைட்டிடம் இருந்து கீதா ஜீவன் பண ஆதாயம் பெற்றதாக சமூக வலைத்தளங்களிலும் கருத்து பரப்பப்படுகின்றன. அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டுக்கு எதிராக கீதா ஜீவன் ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு அமைச்சருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். முதல்வரின் குற்றச்சாட்டுக்கும் "என் மீது பழி போடுவதாக நினைத்து என் மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தாதீர்கள்" என பதில் அளித்திருக்கிறார்.

மாபெரும் போராட்டம், அதைத்தொடர்ந்து துப்பாக்கிச் சூடு, 13 உயிர்பலிகள், படுகாயங்களுடன் உயிருக்கு போராடும் மக்கள் என எல்லாவற்றையும் தாண்டி எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. இந்த குற்றச்சாட்டுகளை அவர் எப்படி பார்க்கிறார். அவரிடமே பேசினோம்.

சமூகவிரோதிகள் தான் துப்பாக்கிச்சூட்டுக்கு காரணம் என்கிறார் ரஜினி, கீதா ஜீவன் தான் காரணம் என்கிறார் முதல்வர், நீங்கள் தான் கலவரத்துக்கு காரணமான சமூக விரோதியா?

அரசியல் கட்சிகள் போராட்டத்தில் புகுந்தால், போராட்டம் திசை மாறிவிடும் என மக்கள் கருதினர். அதனால், அவர்களே தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினர். அதிமுக, பாஜக தவிர்த்து அனைத்துக் கட்சி செயல் வீரர்களும் அந்த போராட்டத்தில் மக்களாக கலந்துகொண்டனர். நான் எம்எல்ஏவாகவும், திமுக மாவட்ட செயலாளராகவும் இருப்பதால் அப்போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இருந்தாலும், திமுக சார்பாக மே 22-ம் தேதி தனியே பேரணி நடத்தினோம். அப்போது, எங்களை கைது செய்து தனியாக மண்டபத்தில் அடைத்தனர். இதேபோன்ற நடவடிக்கையை காவல் துறையினர் ஏன் மற்ற இடங்களில் மேற்கொள்ளாமல் துப்பாக்கிச் சூடு நடத்தினர்? முதல்வர் தன் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிப்பதற்காகவும், பொறுப்புகளை தட்டிக் கழிப்பதற்காகவுமே என் மீது பொத்தம்பொதுவாக பழி சுமத்துகிறார். அவர் முதல்வராக இருக்கவே தகுதியற்றவர். டிவியைப் பார்த்து தான் துப்பாக்கிச் சூடு நடந்தது தெரியும் என்கிற முதல்வர், வன்முறைக்கு நான் தான் காரணம் என எப்படி சொல்கிறார்?

அரசு நிகழ்ச்சிக்காக கோவில்பட்டி வரும் முதல்வரால், 100 நாட்கள் நடக்கும் போராட்டத்தைப் பார்க்க ஏன் தூத்துக்குடி வர முடியவில்லை? போராட்டத்தைக் கண்டும் காணாமல் இருந்துவிட்டு, ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக தமிழக அரசு இருந்தது என்பது என்னுடைய குற்றச்சாட்டு.

சமூக விரோதிகள் ஊடுருவி விட்டனர் என ரஜினி கூறுவது ஸ்டெர்லைட் போராட்டத்தைக் களங்கப்படுத்துவது போல் உள்ளது. ரஜினியின் குரலும் முதல்வரின் குரலும் பிரதமரின் குரலாகத் தான் தெரிகிறது. இதுவரை பிரதமர் மோடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு சிறிய வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.

முதல்வர் சொல்லும் குற்றச்சாட்டு ஆதாரமில்லாதது என சொல்கிறீர்கள். அப்படியானால், முதல்வர் மீது மான நஷ்ட வழக்கு தொடர வாய்ப்புள்ளதா?

கண்டிப்பாக. தூத்துக்குடி மக்களே நான் ஏன் இன்னும் முதல்வருக்கு எதிராக வழக்கு தொடுக்கவில்லை என்று தான் கேட்கின்றனர். 26 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கிறேன். எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் விதமாக பேசிய முதல்வருக்கு எதிராக நான் மான நஷ்ட ஈடு வழக்கு தொடருவேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ், அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் பழனிசாமி அனைவருமே உங்களுக்கு ஸ்டெர்லைட்டுடன் ஒப்பந்த வணிகத் தொடர்புகள் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்? எல்லோரும் உங்களைக் குறிவைக்க காரணம் என்ன?

அதிமுக வேட்பாளரை எதிர்த்து நான் வெற்றி பெற்றதால், அந்த கட்சி எனக்கு எதிராக பேசுகிறது. ஏன் பாமக இப்படி பேசுகிறது என்பது புரியவில்லை. ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் எனக்கோ, எனது குடும்பத்தாருக்கோ எந்த விதமான வணிகத் தொடர்பும் இல்லை. அந்நிறுவனத்திற்கு எனது பெயரில் 600 லாரிகள் ஓடுகிறது என்பதெல்லாம் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. எனது பெயரைக் கெடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் இவ்வாறு குற்றம்சாட்டுகின்றனர். அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் நான் தோற்க வேண்டும் என்பதற்காகத் தான் இப்படி பேசுகின்றனர்.

உங்கள் மீதான குற்றச்சாட்டுகளை தூத்துக்குடி மக்கள் எப்படி பார்க்கின்றனர்?

தூத்துக்குடி மக்கள் என் பக்கம் தான் இருக்கின்றனர். இத்தனை ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் என்னுடைய பங்கு என்ன என்பது மக்களுக்கு தெரியும். முதல்வருக்கு எதிராக வழக்கு தொடுக்குமாறு என் மக்கள் தான் சொல்கின்றனர். அதன்படி தான் நான் வழக்கு தொடுக்க உள்ளேன். மே 22-ம் தேதி நான் எப்படி பேரணி நடத்தினேன், காவல்துறை என்னை கைது செய்தது என அனைத்திற்கும் ஆதாரங்கள் உள்ளன.

உள்ளூரில் போராட்டக்குழுவினருடன் தொடர்பில் இருக்கிறீர்களா? ஸ்டெர்லைட் மூடப்படும் என்கிற அரசாணையை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்?

போராட்டக் குழுவினருடன் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான வழக்கின் நிலைமை குறித்தும் கேட்டறிகிறோம். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை தூத்துக்குடி மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதே போன்றதொரு அரசாணையைத் தான் 2013-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பிறப்பித்து ஆலையை மூடியது. ஆலைக்கான மின்சாரம், தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி ஆலை திறக்கப்பட்டது. இந்த அரசின் முடிவை மக்கள் நம்பவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக சட்டப்பேரவையைக் கூட்டி அரசு தீர்மானம் இயற்ற வேண்டும். லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் ஆலைக்காக தமிழக அரசும், மத்திய அரசும் செயல்படுகிறது என்பது தான் மக்களின் எண்ணம்.

தூத்துக்குடியைச் சேர்ந்த குடிமகள் என்கிற அடிப்படையில் சொல்லுங்கள். ஸ்டெர்லைட் விவகாரத்தில் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக அனைவர் மீதும் குற்றச்சாட்டு உள்ளதே? ஸ்டெர்லைட்டின் விதிமுறை மீறல் குற்றச்சாட்டுகளை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிமுக ஆட்சிக்காலத்தில் மட்டுமல்லாமல் திமுக ஆட்சிக்காலத்திலும் மறைத்தே வந்திருக்கிறது என்ற புகாருக்கு உங்கள் பதில் என்ன?

மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் விவகாரத்தில் என்னென்ன செய்தது என்பதை யாரேனும் புகார் கொடுத்திருந்தால் தானே அரசுக்கு தெரியவரும். நானும் சமூக நலத்துறை அமைச்சராக இருந்திருக்கிறேன். திமுக ஆட்சிக்காலத்தில் ஸ்டெர்லைட் தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கைகள், உரிய உரிமம் இல்லாமல் இயங்கியது தொடர்பாக எந்தவித புகாரும் அரசின் கவனத்துக்கு வரவில்லை.

தற்போது ஸ்டெர்லைட் ஆலை இரண்டாவது யூனிட் விரிவாக்கத்திற்காக மாவட்ட ஆட்சியர் கண் துடைப்புக்காக கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தினார். அப்போது மக்கள் புகார் எழுப்பினர். இம்மாதிரி திமுக ஆட்சியில் மக்கள் புகார் தெரிவிக்கவில்லை.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஆதாயம் அடைந்திருப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டுகிறார். எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இதை சொல்லுகிறீர்கள்? அதிமுக அடைந்த ஆதாயங்கள் என்னென்ன?

2013-ல் ஜெயலலிதா ஆலையை மூடுகிறார். அதன்பிறகு ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு சென்று ஆலையை திறக்கிறது. அதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு என்ன ஆனது? இப்போதும் முதல்வர் பழனிசாமி அரசில் தான் துப்பாக்கி சூடு நடத்தப்படுகிறது. அதுகுறித்து உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. துப்பாக்கிச் சூட்டுக்கு யார் உத்தரவிட்டது? எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்ற விவரம் இல்லை. அதனால், தமிழக அரசு ஆலையிடமிருந்து ஆதாயம் அடைந்ததாகத் தானே குற்றச்சாட்டை முன்வைக்க முடியும்.

சட்டப்பேரவைக்குள் உள்ளேயிருந்து கேள்வி கேட்டு அரசின் தவறுகளை எதிர்க்கட்சி அம்பலப்படுத்த வேண்டும் என்றுதானே மக்கள் நினைப்பார்கள். அதை விடுத்து அறிவாலயத்துக்குள் மாதிரி சட்டப்பேரவை நடத்துவதால் யாருக்கு என்ன பயன்?

அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சட்டப்பேரவைக்குள் முடிந்தளவுக்கு எடுத்து வைத்தோம். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், கைது செய்யப்பட்ட பொதுமக்கள் மீது எந்த ஒரு வழக்குமின்றி விடுவிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் வலியுறுத்தினோம். கருப்பு உடையணிந்து எதிர்ப்பை பதிவு செய்தோம். அதன் பிறகு தான் மாதிரி சட்டப்பேரவை நடத்தப்பட்டது.

முதல்வருக்கு உங்களின் சவால் என்ன?

நிர்வாக திறனற்ற முதல்வர் இவர். முடிந்தால் என் மீது சொல்லும் குற்றச்சாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிரூபிக்கட்டும். அதன்பின்பு பார்த்துக் கொள்ளலாம். என் மீதான குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. அரசு நிர்வாகம் சரிவர இருந்திருந்தால் இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்காது. 100 நாட்களாக போராட்டக் களத்தில் என்ன நடந்ததென்பதே முதல்வருக்கு தெரியாது.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x