Published : 23 Jul 2024 04:12 AM
Last Updated : 23 Jul 2024 04:12 AM

மினி பேருந்து திட்டம் குறித்து கருத்துகேட்பு: ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியதால் கூட்டத்தில் சலசலப்பு

மினி பேருந்து வரைவு அறிக்கை தயாரிப்பு தொடர்பாக, உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: தமிழக அரசின் மினி பேருந்து திட்டம் குறித்து சென்னையில் பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடந்தது. அப்போது இந்த திட்டத்துக்கு இருதரப்பினர் இடையே ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியதால் கூட்டத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் தற்போது 2,950 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகளின் சேவையை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் புதிய விரிவான மினி பேருந்து திட்ட வரைவு அறிக்கையை தமிழக அரசுகடந்த மாதம்வெளியிட்டது. புதிதாக கொண்டு வரப்படும் திட்டத்தின் படி 25 கிமீ வரைமினி பேருந்துகளை இயக்கலாம், 30 சதவீதம் ஏற்கெனவே உள்ள வழித்தடங்களில் செல்லலாம், மீதமுள்ள70 சதவீதம் புதிய வழித்தடத்தில் இயக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

பயணிகளின் தேவைக்கேற்ப சென்னையின் திருவொற்றியூர், மணலி,மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் மினி பேருந்துகளை இயக்குவது குறித்து பரிசீலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், புதிய மினி பேருந்து திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டம், போக்குவரத்து துறை ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு உள்துறை செயலாளர் தீரஜ்குமார் முன்னிலை வகித்தார். இதில் போக்குவரத்து துறை அதிகாரிகள்,தொழிற்சங்கத்தினர், வியாபாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்து கேட்புக் கூட்டத்தில் ஏஐடியுசி, சிஐடியு, ஆட்டோ தொழிற்சங்கத்்தினர், தனியார் பேருந்து உரிமையாளர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு கருத்துகளை தெரிவித்தனர். ஆனால், வியாபாரிகள், பயணிகள் சங்கம், குடியிருப்போர் நலசங்கம் மற்றும் மினி பேருந்து உரிமையாளர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே திடீரென சலசலப்பு ஏற்பட்டதையடுத்து, அதிகாரிகளும், போலீஸாரும் அவர்களை சமாதானப்படுத்தினர்.

இதற்கிடையில் இந்த திட்டத்துக்கு கருத்து தெரிவித்து பேசிய போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், ``சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் மினி பேருந்துகளை இயக்க வேண்டும். 25 கிமீ வரை மினி பேருந்துகளை இயக்காமல், 6 முதல் 8 கிமீ வரை மட்டுமேஇயக்க வேண்டும். ஜிபிஎஸ் உதவியுடன் மட்டுமே இயக்க வேண்டும்'' என்றார்.

இதையடுத்து, இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் அனைத்தையும் அரசின் கவனத்துக்கு எடுத்துசென்று உரிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என உள்துறை செயலாளர் தீரஜ்குமார் தெரிவித்தார். மேலும், கருத்து தெரிவிக்காதவர்களிடம் எழுத்துப்பூர்வமாக கருத்து பெறப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x