Last Updated : 22 Jul, 2024 09:52 PM

 

Published : 22 Jul 2024 09:52 PM
Last Updated : 22 Jul 2024 09:52 PM

“வங்கதேசத்தில் துப்பாக்கி சத்தம், அச்சம்...” - கிருஷ்ணகிரி திரும்பிய மாணவிகள் விவரிப்பு

வங்கதேசத்தில் இருந்து மீட்கப்பட்டு சொந்த ஊரான கிருஷ்ணகிரி திரும்பிய மாணவிகள்.

கிருஷ்ணகிரி: வங்கதேசத்தில் துப்பாக்கி சத்தத்தில், கலவர அச்சத்தில் இருந்த எங்களை பாதுகாப்பாக மீட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என கிருஷ்ணகிரி மாணவிகள் தெரிவித்தனர்.

வங்கதேசத்தில், கல்வி, வேலை வாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் கலவரம் வெடித்து, 100-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், அங்கு படித்து வந்த இந்திய மாணவ, மாணவிகளை, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மீட்டு வருகிறது. அதன்படி, வங்க தேசத்தில் மருத்துவம் படிக்க சென்றிருந்த தமிழகத்தை சேர்ந்த, 49 மாணவ, மாணவிகள் நேற்று பாதுகாப்பாக ஊருக்கு திரும்பினர். இதில் கிருஷ்ணகிரி, ஜக்கப்பன் நகரை சேர்ந்த பயிற்சி மருத்துவர் ப்ரீதா வாசுதேவன் (25), இறுதியாண்டு மாணவிகளான ஸ்ரீநிதி ராமமூர்த்தி (23) ஆலப்பட்டி தக்சண்யா ஜேம்ஸ் ( 22) உள்பட 12 பேர் வீடு திரும்பினர்.

தொலைத்தொடர்பு முடக்கம் - இது குறித்து மாணவிகள் செய்தியாளர்களிடம் கூறியது: "நாங்கள் அனைவரும் வங்கதேசத்தில் சிலேட் பகுதியில் உள்ள சிலேட் மகளிர் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறோம். இதில், சிலர் மருத்துவம் முடித்துவிட்டு பயிற்சி மருத்துவராகவும் உள்ளனர். எங்கள் கல்லூரியில் மட்டும் இந்தியாவை சேர்ந்த, 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த ஜூலை 17ம் தேதி வங்கதேசத்தில் மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்ட செய்தி பரவியது. இதன் விவரங்கள், கலவரங்கள் குறித்து முழுமையாக அறிவதற்குள் இணையதளம், செல்போன் உள்ளிட்ட தொலை தொடர்புகள் முற்றிலும் முடங்கியது. நாங்கள் தங்கியிருந்த விடுதியில் உணவு கூட வழங்கப்படவில்லை.

ஒரு செல்போனில் மட்டும் டவர்.. - "கடந்த 2 நாட்கள் முன்பு, துப்பாக்கி சத்தம் மற்றும் கலவர வீடியோக்களை பார்த்து கலவரம் தீவிரமடைந்ததை தெரிந்து கொண்டோம். எங்கள் பெற்றோரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. எங்கள் விடுதியில் இருந்த மாணவி தக்சண்யாவின் செல்போனில் மட்டும் அதிர்ஷ்டவசமாக டவர் கிடைத்தது. அந்த செல்போன் மூலம், 60 மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் பேசி தகவல் தெரிவித்தனர்.

மேலும், தொலைக்காட்சியில் வெளியான உதவி எண்ணை தொடர்பு கொண்டு இந்திய வெளியுறவு தூதரக அதிகாரிகளிடம் பேசினோம். அவர்கள் உடனடியாக எங்கள் அனைவரையும் தொடர்பு கொண்டு பெயர், விவரங்களை மட்டும் கேட்டனர். அதன் பின் தமிழக அரசு உதவியோடு, எங்களது பாஸ்போர்ட் விவரங்கள் முதல் விமான டிக்கெட் வரை அவர்களே ஏற்பாடு செய்தனர்.

ராணுவ பாதுகாப்புடன்: கடந்த 20-ம் தேதி மதியம் 3 மணியளவில் சிலேட் பகுதியில் இருந்து கிளம்பிய நாங்கள், சிலாங், தமாபில், தவுகி எல்லை வழியாக கவுஹாத்திக்கு ராணுவ பாதுகாப்போடு அழைத்து வரப்பட்டோம். நேற்று கவுஹாத்தியில் இருந்து விமானம் மூலம் கிளம்பிய நாங்கள் சென்னை வந்தோம். எங்களை தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். 3 நாட்கள் துப்பாக்கி சத்தம், கலவர அச்சத்தில் சிக்கி இருந்த எங்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு உதவிய மத்திய, மாநில அரசுகளுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்” என்றனர்.

இதனிடையே, வங்கதேசத்தில் கல்வி, அரசு வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீடு 7 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 93 சதவீதம் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும் என்று அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. அதன் விவரம்: வங்கதேசத்தில் இடஒதுக்கீடு 7 சதவீதமாக குறைப்பு: உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மாணவர்கள் கலவரம் ஓய்கிறது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x