Published : 22 Jul 2024 08:39 PM
Last Updated : 22 Jul 2024 08:39 PM

நீலகிரியில் கனமழைக்குப் பின் சூறாவளிக் காற்று: பல வீடுகளின் கூரைகள் பறந்ததால் அச்சம்

உதகை: கனமழையைத் தொடர்ந்து சூறாவளி காற்று வீசிவருவதால், நீலகிரியில் வீடுகளின் கூரைகள் காற்றில் பெயர்ந்ததால் விழுந்தது. சேதமடைந்த கூரைகளை சீரமைத்து தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் என கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவலாஞ்சி, முதுமலை சூழல் சுற்றுலா மையங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கும் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதன்முறையாக காற்றில் வேகத்தால் மாணவர்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் முதல் மழையின் தீவிரம் சற்று குறைந்து காணப்பட்டது. ஆனால், காற்றின் வேகம் கூடியிருக்கிறது. உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்று வீசி வருகிறது. காற்றின் வேகத்தால் பல பகுதிகளிலும் மரங்கள் பெயர்ந்து விழுந்துள்ளன. பல சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மின் கம்பிகள் மீது மரங்கள் விழுவதால் பல பகுதிகளில் மின் வினியோகம் தடைபட்டது. பல இடங்களில் வீடுகளின் கூரைகள் காற்றில் பெயர்ந்து வருகின்றன.

காற்றின் வேகத்தால் குன்னூரில் உள்ள கிராமங்கள் உருக்குலைந்து காணப்படுகின்றன. குன்னூரில் காமராஜர் புரம் கிராமத்தில் சூறாவளிக் காற்று வீசியதால் 6 வீடுகளில் கூரைகள் பறந்தன. இரு ட்ரான்ஸ்பார்மர்கள் மீது விழுந்ததால் மின்தடை ஏற்பட்டுள்ளது. பேரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அண்மையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் இந்த கிராமத்தில் மேற்கூரைகள் சீரமைக்க தொகுப்பு வீடுகள் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டுக்கு ரூ.50 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு, கூரைகள் அமைக்கப்பட்டன.

ஆனால் இதை தரமாக மேற்கொள்ளப்படாததால் வீசிய சூறாவளி காற்றில் ஆறு வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்து அருகே உள்ள தோட்டங்களில் வீசப்பட்டன. சில வீடுகளில் விரிசல்களும் ஏற்பட்டுள்ளது. பெயர்ந்து விழுந்த கூரைகளை ஊராட்சி நிர்வாகம் சீரமைத்து தர வேண்டும் என்றும் பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பாதிப்பு குறித்து கிராம மக்கள் கூறும் போது,"இதுவரை இல்லாத வகையில் நேற்று இரவில் இருந்து இடைவிடாமல் காற்று வீசுகிறது. காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் கூரைகள் அனைத்துமே பெயர்ந்துள்ளது. கூரை ஓடுகள் தரையில் கிடக்கின்றன. 40-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

மின் கம்பிகள் அறுந்து கிடக்கிறது. மரங்களும் சாய்ந்துள்ளன. கூலித் தொழிலாளர்கள் அதிகம் வாழும் எங்கள் கிராமத்தில் ஏற்கனவே எந்தவிதமான அடிப்படை வசதிகளும் கிடையாது. இருந்த வீட்டையும் ‌காற்றால் இழந்து தவிக்கிறோம். அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

இது குறித்து உதகை மத்திய மண் மற்றும் நீர் வள பாதுகாப்பு நிறுவன விஞ்ஞானிகள் கூறும்போது, "நீலகிரியில் கால நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து கன மழை பெய்தது. இம்முறை சராசரியை விட கூடுதலாக மழை பெய்துள்ளது. இந்நிலையில், வழக்கம் போல் அல்லாமல் காற்றின் விசை அதிகமாக உள்ளது. காற்றின் வேகம் 5 மைல் மற்றும் 7 மைலாக உள்ளது. இது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x