Published : 22 Jul 2024 06:58 PM
Last Updated : 22 Jul 2024 06:58 PM
மதுரை: பெட்ரோல் குண்டு வீசி 3 பேரை கொலை செய்த வழக்கில் அட்டாக் பாண்டியின் பரோல் மனுவை நிராகரித்து விட்டதாக, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் சிறைத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
மதுரை நாளிதழ் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி 3 பேரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர் கீரைத்துறையைச் சேர்ந்த ரவுடி அட்டாக் பாண்டி. இவர் மதுரை மத்திய சிறையில் இருந்து வருகிறார்.அட்டாக் பாண்டியை பரோலில் விடுதலை செய்யக்கோரி அவரது மனைவி தயாளு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் என் கணவர் அட்டாக் பாண்டிக்கு 2019-ல் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ஆயுள் தண்டனை வழங்கியது.
என் கணவர் 5 ஆண்டுக்கு மேலாக மதுரை மத்திய சிறையில் இருந்து வருகிறார்.எனக்கு இருதய பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். என் மருத்துவ செலவுக்காக கணவரின் பெயரில் உள்ள சொத்துகளை விற்க வேண்டும். அதற்காக சிறையில் உள்ள அட்டாக் பாண்டிக்கு ஒரு மாத பரோல் விடுமுறை வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, ராஜசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. சிறைத்துறை சார்பில், மனுதாரரின் கணவருக்கு பரோல் கோரி மனு அளிக்கப்பட்டது. அட்டாக் பாண்டி மீது மாவட்ட நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. மனுதாரரின் கணவருக்கு சாதாரண விடுப்பு வழங்க மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் பரிந்துரைக்கவில்லை. இதனால் பரோல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்டு, மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT